விமர்சன மதிப்பீடு
29/6/2019 அன்று சென்னையில் கன்னிமாரா நூலகத்துக்கு எதிரில் உள்ள இக்சா சென்டரில் மேலும் வெளியீட்டகம் சார்பில் விமர்சனக் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்வின் இரண்டாம் அமர்வில் எனது விமர்சன அளவீடுகள் குறித்துப் பேச இருந்தேன். முடியாமல் போய்விட்டது. அந்தக் கட்டுரை கீழே: மேலும் வெளியீட்டகத்தின் விமர்சனக் கருத்தரங்கத்திற்கு வருகை தந்திருக்கும் பெரியோர்கள் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். விருதுபெறும் அ. குமரேசன் அவர்களுக்கும் முபின் சாதிகா அவர்களுக்கும் முதற்கண் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில் மேலும் சிவசு அவர்களை நேரில் சந்தித்தபோது இந்த விமர்சனக் கருத்தரங்கில் கலந்துகொண்டு நான் முன்வைக்கும் விமர்சனங்களின் அடிப்படை, அளவீடுகள் சார்ந்து உரையாற்றும்படி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும் இதுவரை எழுதிய விமர்சனங்களில் உள்ள உள்ளார்ந்த வரையறைகளைத் தொகுப்பது பற்றி நான் யோசித்திருக்கவில்லை. ஆனால் அது அவசியமான ஒன்றாக எனக்குத் தோன்றியதால் சரியென்று உடனே ஒத்துக்கொண்டேன். இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட விமர்சனக் கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். ‘அம்சிறைத் தும்பி’ என்ற ப...