’சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ - ஆர். பாலகிருஷ்ணன்
நண்பர் இலக்குவன் மூலம் ’ சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் ’ என்ற புத்தகம் வாசிக்கக் கிடைத்தது. பாரதி புத்தகாலயம் வெளியீடு. பிரமிக்கச் செய்யும் உழைப்பைத் தந்திருக்கிறார் நூலாசிரியர் ஆர். பாலகிருஷ்ணன். 1984ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணித் தேர்வை முதன்முதலாக தமிழில் எழுதி வெற்றி பெற்றவர். தற்போது ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலராகவும் அம்மாநிலத்தின் வளர்ச்சி ஆணையர் பொறுப்பிலும் உள்ளார். மறுக்கவோ, நிராகரிக்கவோ முடியாதபடி சிந்துவெளி நாகரீகம் திராவிடருடையது என்பதோடு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் எப்படிப் பரவியுள்ளது என்பதை ஆதாரங்களையும் தர்க்கங்களையும் வைத்து நிறுவுகிறார். இதுபோன்று ஒரு பத்து புத்தகங்கள் வந்துவிட்டாலும் போதும். இந்தப் புத்தகம் குறிப்பாக எடுத்துக்கொள்ளும் முறைமை “மேல்-மேற்கு, கீழ்-கிழக்கு”. எனக்கு ’மேல் நாடுகளில்’, ‘மேற்கத்திய நாடுகளில்’ என்று குறிப்பிட்டுச் சொல்லும்போதெல்லாம் உள்ளுக்குள் சிறு அர்த்தக்குளறுபாடு தோன்றும். மேற்கு என்பது ஒரு திசையைக் குறிப்பதுதானே, இங்கே மேற்கத்திய அல்லது மேற்கு நாடுகளில் என்று சொல்லாமல் எதற்கு மேல் நாடு என்று சொல்கிறோம்? இது நம...