விமர்சன மதிப்பீடு

29/6/2019 அன்று சென்னையில் கன்னிமாரா நூலகத்துக்கு எதிரில் உள்ள இக்சா சென்டரில் மேலும் வெளியீட்டகம் சார்பில் விமர்சனக் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்வின் இரண்டாம் அமர்வில் எனது விமர்சன அளவீடுகள் குறித்துப் பேச இருந்தேன். முடியாமல் போய்விட்டது. அந்தக் கட்டுரை கீழே:


மேலும் வெளியீட்டகத்தின் விமர்சனக் கருத்தரங்கத்திற்கு வருகை தந்திருக்கும் பெரியோர்கள் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். விருதுபெறும் அ. குமரேசன் அவர்களுக்கும் முபின் சாதிகா அவர்களுக்கும் முதற்கண் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சமீபத்தில் மேலும் சிவசு அவர்களை நேரில் சந்தித்தபோது இந்த விமர்சனக் கருத்தரங்கில் கலந்துகொண்டு நான் முன்வைக்கும் விமர்சனங்களின் அடிப்படை, அளவீடுகள் சார்ந்து உரையாற்றும்படி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும் இதுவரை எழுதிய விமர்சனங்களில் உள்ள உள்ளார்ந்த வரையறைகளைத் தொகுப்பது பற்றி நான் யோசித்திருக்கவில்லை. ஆனால் அது அவசியமான ஒன்றாக எனக்குத் தோன்றியதால் சரியென்று உடனே ஒத்துக்கொண்டேன்.

இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட விமர்சனக் கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். ‘அம்சிறைத் தும்பி’ என்ற பெயரில் ஒரு கட்டுரைத் தொகுப்பு கிண்டில் வெளியீடாக வந்துள்ளது. சில புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகளை முன்வைத்து விமர்சித்திருந்தாலும், எனது பெரும்பாலான கட்டுரைகள் கவிதைகள் குறித்தானதே. காரணம், கறாரான, சரியான, நேர்மையான விமர்சனங்கள் கவிதைகள் குறித்து எங்கும் பார்க்க இயல்வதில்லை. இதனால் பிரபலங்களின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்தபடி குறுக்குவழியில் மேடையேறி விருதுகளைப் பெறுபவர்களும், தகுதிக்குமீறி கொண்டாடப்படுபவர்களும் நிறைந்து, தகுதியான கவிஞர்கள் வாசகர்களுக்கு அறிமுகபடுத்தப்படாமல் அல்லது கவனப்படுத்தப்படாமல் போய்விடுகிறார்கள். இந்தப் பணியை வேறு யாரேனும் செய்துகொண்டிருந்தால் நிச்சயம் நான் இதைச் செய்துகொண்டிருக்கப் போவதில்லை. இங்கே எவ்விதத்திலும் என்னை முன்னிலைப்படுத்த நான் முயலவில்லை. படைப்புகள் கவனப்படுத்தப்பட வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கமாக உள்ளது.

என்னுடைய மதிப்பீடுகள் அகவயமானவை. எனவே சுயமான பார்வையை தளமாகக் கொண்டவை. குறிப்பாக கவிதை விமர்சனத்தை இரசனாபூர்வமாக அகமுகப் பார்வையோடு வைப்பதே பொருத்தமானது. கவிதை உருவ அளவில் சிறியது. சொற்சிக்கனமுடையது. மின்னல்வெட்டைப் போல ஒரு காட்சியைப் புலப்படுத்திவிட்டு வாசிப்பவரின் உள்ளே ஒரு தந்தியின் அதிர்வை வெகுநேரம் ரீங்கரிக்கச் செய்வது. எனவே, இங்கே எழுதுவதற்கான அகத் தூண்டுதல், மனோலயம், அதன் ஆழம், வார்த்தைச் செறிவு, வரிகளில் ஓடும் தெறிப்பு, நோக்கம் நிறைவுறுதல் போன்றவை முக்கிய அளவீடுகளாகின்றன. அவ்வாறின்றி கவிதை பேசும் பொருளை வைத்து பொழிப்புரை வழங்கும்போது அல்லது பொருண்மைப்படுத்தும்போது கவிதை மறைந்துவிடுகிறது.

1) விமர்சகர் ஒரு நூலகர்
      விமர்சகரின் பணியை ஒரு நூலகரின் பணிக்கு இணையானதாகச் சொல்லலாம். நூலகத்துக்கு வரும் வாசகர் குறிப்பிட்ட புத்தகத்தை தனது இரசனைக்கேற்பத் தேடி வருகிறார். தேடும்போது புத்தகங்களின் வரிசை அவரால் மாற்றிவைக்கப்படுகிறது. சில கீழே தவறவிடப்படுகின்றன. புத்தகங்களை ஒளித்துவைக்கும் வாசகர்களும் உண்டு. ஒரு நூலகர் தொடர்ச்சியாக புத்தகங்களின் வரிசையில் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது. எந்தப் புத்தகம் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்த இடத்தில் சரியாக வைப்பது நூலகரின் தலையாய பணி. ஒரு விமர்சகரும் இதைத்தான் செய்கிறார். வாசகர் தனக்குப் பிடித்தது என்பதற்காக ஒரு படைப்பினை மேலே வைக்கிறார். பிடிக்காததை, உள்ளே நுழையமுடியாததை கண்காணாத இடத்துக்குத் தன்னையறியாமல் தள்ளுகிறார். விமர்சகர் சரியான அளவீடுகளின்படி அதன் நிறைகுறைகளை அலசி விரிவான பார்வையை முன்வைக்கிறார். இதன்மூலம் படைப்பு தனக்கான இடத்தைக் கண்டடைகிறது. பல விமர்சகர்கள் நேர்மையாக ஒரே படைப்பு மீதான வெவ்வேறான பார்வைகளை முன்வைக்கும்போது அவ்விடம் மேலும் துல்லியமுறுகிறது.

2) அடையாள மறுப்பு
படைப்பானது அதன் மதிப்பை தனக்குள்ளேயே கொண்டுள்ளது. ஆயினும் இங்கே மதிப்பு என்பது உருவாக்கப்படுவதாகவே உள்ளது. ஒரு மூத்த பிரபல எழுத்தாளர் ஒரு படைப்பைப் பற்றி நேர்மறையாகச் சொல்லிவிட்டால் அதை நம்பி அதே கருத்தையே தானும் உருவாக்கிக் கொள்ளும்போக்கு வாசகர்களிடையே பரவலாகக் காணமுடிகிறது. இந்த சிந்தனைச் சோம்பல், பிரதிபலிக்கும் குணம் மாற வேண்டுமானால், கறாரான விமர்சகர்கள் துணிச்சலோடு எழுத முன்வர வேண்டும். மொண்ணையான எழுத்தை தூக்கிப்பிடித்தால் நாளைக்கு விமர்சகன் தன்னையும் கேள்விக்கு உட்படுத்துவான் என்பதை எழுத்தாளர்களுக்கு உணரச்செய்ய வேண்டும். அது முழுவீச்சில் விமர்சகர்கள் செயல்பட்டால் மட்டுமே முடியும்.
படைப்பு அதன் மதிப்பை தனக்குள்ளேயே கொண்டுள்ளது என்பதால் எழுத்தாளருக்கான அடையாளத்தை மறுக்கிறேன். ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் படைப்பு என்ற பிரத்யேகத் தன்மையை அகற்றவேண்டும். அடையாளம் என்பது ஒரு சுமை. கவிஞர் என்பதினாலேயே, உள்ளெழுச்சியோ படைப்பூக்கமோ இன்றி தனது அடையாளத்துக்கு நியாயம் சேர்க்க கவிதை என்னும் வடிவத்தையும், மொழியாளுமையும் கொண்டு போலச்செய்யும் எழுத்து பெருக இது வழிவகுக்கும். மேலும் அடையாளம் என்பது அதிகாரத்தை நோக்கிச் செயல்படுவது. இலக்கியம் என்பதுதான் கொண்டாடப்பட வேண்டும், மரியாதை செய்யப்பட வேண்டுமே தவிர எந்தத் தனிநபரையும் அல்ல.

3) உத்வேகம்
உத்வேகம் என்பது படைப்பில் (கவிதையில்) இருவிதங்களில் செயல்படுகிறது. முதலாவது ஒரு கவிதை எழுதப்படுவதன் பின்னால் இருப்பது உத்வேகம். அத்தகு தன்னெழுச்சி இன்றியும் கவிதைகள் ‘செய்யப்படுகின்றன’. ஆனால் ஒரு விமர்சகர் தனது நுட்பமான கூர்ந்த அவதானத்தினால் இதை அறியவேண்டும். ஓர் உதாரணம்:
      வானத்தை
      விழுங்கிக் கொண்டிருந்தது
      நிலவும் சூரியனும்
      கண்ணாடிச்
      சில்லுகளாய்
      உடைந்து
      விழுகின்றன
      அலைப்பரப்பில்
      சிதறியதை
      மெல்லத் துழாவி
      பத்திரமாய்
      வைத்துக்கொண்டேன்
      நாளைய   
      பகலுக்கும் இரவுக்கும்
      வேறென்ன செய்ய! 

இது கவிஞர் நந்தகுமார் எழுதியது. மேற்கண்ட கவிதை அழகியல் ரீதியில் நன்றாக அமைந்திருக்கிறது. ஆனால் இது மேம்போக்கானது. முதல் மூன்று வரிகளைப் பாருங்கள். /வானத்தை விழுங்கிக் கொண்டிருந்தது நிலவும் சூரியனும்/ இதில் உள்ள இலக்கணப் பிழையை மன்னித்துவிடுவோம். ஒரே நேரத்தில் வானத்தில் சூரியனும் நிலவும் ஆதிக்கம் செலுத்துமா? அப்படியே வைத்துக் கொண்டாலும் இரு சிறு வட்டங்களான அவை வானை விழுங்குவதாய் எத்தனை முயன்றாலும் படிமமாய்ப் பதியவில்லை. ஒரு மாலைவேளை நீர்நிலை அருகில் அமர்ந்திருக்கும்போது செங்கதிர்கள் அலைகளில் மாறிமாறி ஒளியைச் சிதறுவது சில்லுசில்லாக விழுவது போன்ற மயக்கத்தை ஏற்படுத்தி அதிலிருந்து இக்கவிதை உருவாகி இருக்கலாம். ஆனால் முழுமையாகப் பார்க்கும்போது கவிதை வாசகருக்கு அனுபவத்தைக் கடத்தாமல் அரைகுறையான ஒன்றாக நின்றுவிடுகிறது. கவிதை எழுதுவதற்கான உந்துதல் அத்தனை தீவிரமானதாக இல்லை என்பது ஒரு முக்கிய காரணமாகச் சொல்லலாம். (எழுத்தாளரின் திறனின்மை என்று சொல்லமுடியாது, ஏனெனில் கற்பனையோடு, அழகாக எழுதும் திறன்படைத்தவர் என்பது கவிதையை வாசிக்கும்போதே நமக்குத் தெரிகிறது)

இரண்டாவதாக, உத்வேகம் என்பது வரிகளில் கொடுக்கும் தெறிப்பு. ஒரு எளிமையான வரியாக இருந்தாலும் அதில் ஒரு மின்னற்தெறிப்பு இருப்பது உத்வேகத்தை, படைப்பின் தீவிரகதியை உணர்த்துவது. மேற்சொன்ன கவிதையில் கண்ணாடிச் சில்லுகளாய் உடைந்து விழுகின்றன என்ற ஒரு வரியில் மட்டும் இந்தத் தெறிப்பு நமக்குக் கிடைக்கிறது. ’நாளைய பகலுக்கும் இரவுக்கும் வேறென்ன செய்ய’ என்பது அத்தனை பொருத்தமான இறுதி வரி அல்ல. கடல் அலைகளில் சிதறிக்கிடக்கும் கதிரொளித் துண்டுகள் சொற்களற்ற ஓர் ஆழ்ந்த அனுபவத்தைத் தருவது. அதை நாளைக்கு எடுத்துச் செல்ல முடியாது. அது நினைவாக மாறிவிடும். ஒரு பேரனுபவமும் அதன் நினைவும் வேறுவேறு. முத்தாய்ப்பாய் தனக்கு நேர்ந்த அனுபவத்தை உயர்த்திச் சொல்வதற்காக இறுதி வரியை இப்படி அமைத்திருக்கிறாரே தவிர அதன் உணர்வுகதி போலியானது.

4) சொற்சிக்கனமும் கூர்மையும்
கவிதையின் வடிவம் சிறுகதை, புதினம் போலல்லாது சிலவரிகளை மட்டுமுடையது. என்னதான் நெடுங்கவிதைகள் அவ்வப்போது முயற்சிக்கப்பட்டாலும் செறிவானதும் மனதை உள்ளிழுத்து வரிகளில் திளைக்கச் செய்வதும் நல்லதொரு கவிதைக்கு அடையாளம். அனுபவமும் படைப்புக்கான தீவிரமும், மொழிவளத்தோடு முயங்கி கூர்மையான வரிகளைத் தீர்மானிக்கின்றன. சொற்சிக்கனம் என்பதை ஓர் இலக்கண விதியாகப் பார்க்கவேண்டியதில்லை. ஆனால் உரைநடைக்கும் கவிதைக்கும் வித்தியாசம் இருக்கிறது. உரைநடையில் ஒரு கூற்றை உரைத்தபின் அதைப் போதுமான அளவு விளக்கப்படவேண்டிய பொறுப்பு எழுதுபவருக்கு இருக்கிறது. கவிதையில் அது தேவையில்லை. அது கவிதையின் முழுமைக்கு நியாயம் செய்யும் அளவு மட்டும் இருந்தால் போதுமானது. ஏனெனில், கவிதை இரண்டாவது நபரை உத்தேசித்து எழுதப்படுவதாய் இருக்கக்கூடாது. தன் அகத்தை, சொல்ல வந்ததைப் பிரதிபலிக்க வேண்டுமே தவிர வாசிப்பவருக்குப் புரியுமோ புரியாதோ என்பதற்குள் நுழையக்கூடாது.

5) விளைவின் நோக்கம் நிறைவேற்றுதல்
டெர்ரி ஈகிள்டன் கவிதை பற்றிச் சொல்லியிருப்பதில் இதை ஒரு கோட்பாடாக வகுத்திருப்பார். எதற்காக எழுதப்பட்டதோ அதற்கான நோக்கத்தை நிறைவுசெய்தல். சிலநேரம் ஒருவரி அல்லது ஒரு சொல் கவிதையின் போக்கையே மாற்றக்கூடும். எனினும் எழுதிமுடிக்கப்பட்ட கவிதையில் முழுமையும், எதற்காக எழுதும் உத்வேகத்தை அடைந்தாரோ அதை நிறைவேற்றிய ஒன்றாகவும் இருக்க வேண்டும். நாம் மேலே பார்த்த நந்தகுமாரின் கவிதை அத்தகைய ஒன்றல்ல. அந்தக்கவிதை முழுமையற்று இருக்கிறது. கவிஞர் தன் மொழித்திறனால் இட்டு நிரப்பிவிடுகிறார்.

6) அகமுகப் பயணம்
ஒரு கவிதை பேசும் பொருள் என்ன, அது எந்தளவு ஆழமான தனித்துவமிக்க ஓர் உணர்நிலையைச் சொல்கிறது, அதன் அனுபவம் எந்தளவு உண்மையானது, சிக்கலான வார்த்தைகள் கையாளப்பட்டிருப்பின், அது வேண்டுமென்றே உள்ளதா அல்லது மொழி திகைத்து நிற்கும் இடம் ஏற்படுத்தும் பிரச்சினையா இத்தகைய கேள்விகள் ஒரு கவிதையை விமர்சிக்குமுன் எழுப்ப வேண்டியவையாய் உள்ளன. பொதுவாக உணர்வுகதியின் ஆழத்தை நாம் கணக்கில் கொள்வதில்லை, அல்லது அத்தகைய கவிதைகள் புரிபடாத சிக்கலான ஒன்றாக இருக்கின்றன. இது சாமானிய வாசகரின் கவனத்துக்கு வராமல் எளியவரிகளைக் கையாளும், சாமானியரின் உணர்வுக்கு நெருக்கமாக இருக்கும், மேலோட்டமான கவிதைகள் கொண்டாடப்படுபவையாக உள்ளன. சில கவிதைகள் அற்புதமான விதத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அதற்கு கவிஞரின் மொழியாளுமை முக்கிய காரணமாக இருக்கும். ஆனால் உணர்வுத் தளத்திலோ, பார்வை வீச்சிலோ அது அத்தனை ஆழமுள்ளதாய் இருக்காது.

மேலும் எந்த ஒரு கவிதையையும் தனியாக எடுத்து அதை வைத்து ஒட்டுமொத்தமாக கவிஞரைப் பற்றிக் கூறிவிட முடியாது. இதுவரை நான் எழுதிய விமர்சனக் கட்டுரைகளுக்கு முடிந்தவரை அதுவரை அந்த எழுத்தாளர் எழுதிய தொகுப்புகளை மொத்தமாக வாசித்தும், எழுத்தாளரின் முன்னுரை, பேட்டிகள், உரையாடல்களையும் அவதானித்து பின் எழுதியிருக்கிறேன். அடுத்தது பெரும்பாலும் நான் மேற்கோள்கள் எதுவும் கொடுப்பதில்லை. ஒரு தொகுப்பைப் பற்றிப் பேசுகிறேனென்றால் அந்தத் தொகுப்புக்கும் எனக்குமான தொடர்பு எத்தகையது, அது என்னவாக இருக்கிறது என்பதுதான் எனக்கு முக்கியமானதாகப்படுகிறது.
நன்றி, வணக்கம்.

Comments

Popular posts from this blog

புதுமைப்பித்தன் படைப்புகள் – ஒரு மீள்பார்வை

தண்டியலங்காரம்: பொதுவியல்

தீப்பெட்டி