’சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ - ஆர். பாலகிருஷ்ணன்
நண்பர்
இலக்குவன் மூலம் ’சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்ற புத்தகம் வாசிக்கக்
கிடைத்தது. பாரதி புத்தகாலயம் வெளியீடு. பிரமிக்கச் செய்யும் உழைப்பைத் தந்திருக்கிறார்
நூலாசிரியர் ஆர். பாலகிருஷ்ணன். 1984ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணித் தேர்வை முதன்முதலாக
தமிழில் எழுதி வெற்றி பெற்றவர். தற்போது ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலராகவும் அம்மாநிலத்தின்
வளர்ச்சி ஆணையர் பொறுப்பிலும் உள்ளார். மறுக்கவோ, நிராகரிக்கவோ முடியாதபடி சிந்துவெளி
நாகரீகம் திராவிடருடையது என்பதோடு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் எப்படிப் பரவியுள்ளது
என்பதை ஆதாரங்களையும் தர்க்கங்களையும் வைத்து நிறுவுகிறார். இதுபோன்று ஒரு பத்து புத்தகங்கள்
வந்துவிட்டாலும் போதும்.
இந்தப்
புத்தகம் குறிப்பாக எடுத்துக்கொள்ளும் முறைமை “மேல்-மேற்கு, கீழ்-கிழக்கு”. எனக்கு
’மேல் நாடுகளில்’, ‘மேற்கத்திய நாடுகளில்’ என்று குறிப்பிட்டுச் சொல்லும்போதெல்லாம்
உள்ளுக்குள் சிறு அர்த்தக்குளறுபாடு தோன்றும். மேற்கு என்பது ஒரு திசையைக் குறிப்பதுதானே,
இங்கே மேற்கத்திய அல்லது மேற்கு நாடுகளில் என்று சொல்லாமல் எதற்கு மேல் நாடு என்று
சொல்கிறோம்? இது நம்மையறியாமல் மேற்கிலுள்ள நாடுகளை உளவியல் ரீதியாக உயர்ந்தவை என்ற
தன்மையைத் தோற்றுவிக்காதா? தமிழினத்துக்கே உரிய சிறப்புக்கூறு இது என்பது இந்நூலை வாசித்தபின்பு
புரிந்தது.
இன்று
கவிஞர் கைலாஷ் சிவனுடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று அவர் கேட்டார். பக்தி என்பதன்
பொருள் என்ன. தமிழில் எப்போதும் இறுதி எழுத்து சொல்லமைவின் வசதிக்காக வைத்துக்கொண்டதாக
இருக்கும். மூலச்சொல்லுக்கு அதன் அசையை மட்டுமே பார்க்கவேண்டும். இங்கே ‘பக்’. சட்டென்று
தோன்றியது ‘பக்கம்’. பக்கத்தில் வருவது பக்தி. பக்கம் என்பதற்கு, அருகில், சார்பு நிலை,
நட்பு, சுற்றம் போன்ற அர்த்தங்களும் வருகின்றன. ஒரு குறிப்பிட்ட கடவுள்மேல் தான் பக்தி
கொள்ளமுடியும்.
சிந்துச்சமவெளியில்
தொல்லியல் ஆய்வு நடந்த இடங்களில் அதன் கட்டிட அமைப்புகளை வைத்துப் பார்க்கும்போது குடித்தலைவன்
இருக்குமிடம் மேற்கிலும் குடிகள் கிழக்கிலும் குடியேறும் வழக்கம் இருந்திருக்கிறது.
மேற்குப் பக்கம் மேடாக இருக்குமாறு இடங்களைத் தேர்வு செய்து கிழக்கே தாழ்வாக இருக்குமாறு
இடங்களைத் தேர்வுசெய்து அங்கே குடிகளை அமைப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. இது திராவிடர்களுக்கே
உரிய பாரம்பரியம் என்பதை தமிழ் மொழியிலிருந்தும் (உதாரணத்திற்கு மேடை, மேல், மேற்கு,
மேட்டுக்குடி, மேக்கு, மேலை, மேன் போன்ற சொற்கள் மேம்பட்ட, மேன்மையான, உயரமான, மேலே
இருக்கக்கூடிய என்ற அர்த்தங்களைப் பொருள்கொள்வதைப் போல், கீழ், கீழ்மை, கிழக்கு, கீழ்வானம்
போன்றவை கீழே, கிழக்குதிசை, தாழ்வு, தாழ்வான பகுதி போன்ற அர்த்தங்களைக் குறிக்கிறது).
இது சூழலோடு பொருந்திப்போகும் தன்மையுடன் உள்ளது. மாறாக இந்தோ-ஆரிய மொழிகளில் ’முன்
– கிழக்கு, பின் – மேற்கு’ என்ற அர்த்தப்பாட்டைக் கொண்டுள்ளது. அதாவது ’தனக்கு முன்
இருப்பது கிழக்கு; பின் இருப்பது மேற்கு; வலது தெற்கு; இடது வடக்கு’ என்று மனிதமையப்
பார்வை உள்ளது. உதாரணத்திற்கு கிழக்கு, முன்னால், முதலான, பழமையான முன்னோக்கி போன்ற
அர்த்தங்களைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொற்கள்: பூர்வ, பூர்வார்தா, ப்ராசீன, ப்ராச்யா.
பின்னா, பின்புறம், மேற்கு, கடைசி, வீழ்ந்த, சிதைவுற்ற, தாழ்ந்த, மோசமான, மரணம் போன்ற
அர்த்தங்களைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொற்கள்: பஸ்சார்த, பஸ்சிமா, ப்ஹ்ரஸ்டா, ஆவர,
ஆபர, ஆபரஜன, நீச்ய.
இந்தியாவைத்
தாண்டி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் இன்னமும் புழக்கத்தில் உள்ள
ஊர்ப்பெயர்களாக தமிழ்ப் பெயர்கள் இருப்பதை வரைபடத்தில் குறித்துக் காட்டியுள்ளார்.
ஈரானில் குறிஞ்ஜ் (குறிஞ்சி) என்றொரு ஊர் உள்ளது. ஆப்கானிஸ்தானில், பூம்பகார், பாண்டி,
கொற்கை, யாளூர், காவிரி சேரன் இப்படி இன்னும் பலபெயர்கள் உள்ளன. பாகிஸ்தானிலும் அப்படியே.
அதேபோல தமிழில் கோட்டை என்று பின்னொட்டாக பல ஊர்ப்பெயர்கள் முடிவதுபோல, இந்நாடுகளில்
கோட் என்ற தனிச்சொல்லைக் கொண்ட ஊர்ப்பெயர்கள் பல உள்ளன. குறிப்பாக பாகிஸ்தானில் மட்டும்
49 ஊர்கள் உள்ளன. மலை, குன்று, கோடு, கோடை, வரை போன்றவையும் ஊர்ப்பெயர்களாக இந்த நாடுகளில்
உள்ளன. மலைப்பகுதி, மேட்டு நிலம் திராவிடர்க்குப் பெருமைமிக்க ஒன்று. அதனால்தான் மலை
உச்சிகளில் எல்லாம் கடவுள்களை வைக்கிறோம். சிந்துச்சமவெளி கட்டட அமைப்பின்படி மேற்குதிசை
உயர்வானதாக, குடித்தலைவன் வசிப்பிடமாக வைத்து கிழக்கே தாழ்வாக வைத்ததன் தொடர்ச்சி இன்னமும்
தமிழகத்தில் இருப்பதையும் சான்றுகளுடன் விளக்குகிறார். பெரும்பாலான ஊர்கள் மேல என்று
முன்னொட்டாக கொண்டிருப்பதோடு அதற்கிணையான ’கீழ’ ஊரையும் கொண்டிருப்பதை நாம் அறிவோம்.
இவை வெறுமனே திசையை மட்டும் குறிக்காமல், பெரும்பாலானவை உயரத்தைக் குறிப்பதாகவும் உள்ளன.
இந்தப்
புத்தகம் பல திறப்புகளையும் கேள்விகளையும் எழுப்புகின்றன. எல்லோரும் சொல்வதுபோல வடக்கிலிருந்துதான்
தெற்கே திராவிட இனம் குடியேறியதா? 7000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட நுட்பமான
கற்கருவிகள், குகை ஓவியங்கள் இவையெல்லாம் எதைக் குறிக்கின்றன? அந்த மக்கள் யார்? அண்டை
நாடுகளில் உள்ள இந்த ஊர்ப்பெயர்கள் வேறு எங்காவது சரித்திரக் குறிப்பில் இடம்பெற்றுள்ளனவா?
நூலாசிரியரின் பணி மென்மேலும் தொடர்க என்று மனமார வாழ்த்துகிறேன்.
Comments
Post a Comment