தண்டியலங்காரம்: பொதுவியல்
தண்டியலங்காரம்
சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட காவ்யாதர்சம், காவ்ய தர்ப்பணம், காவ்யப் பிரகாசம், சரசுவதி கண்டாபரணம், சாகித்ய தர்ப்பணம், சந்திராலோகம், சித்திரமீமாஞ்சை, குவலயானந்தம் போன்ற நூல்களில் சில தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தண்டியாசிரியரால் காவ்யாதர்சம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தண்டியலங்காரம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து பாகுபாடுடையது. எழுத்து சொல் இரண்டுக்கும் நன்னூல். பொருளிலக்கணத்துக்கு நம்பியகப்பொருளும் வெண்பாமாலையும். யாப்புக்கு யாப்பருங்கலக்காரிகை. அணியிலக்கணத்துக்கு தண்டியலங்காரம். அணி என்பது அலங்காரம், அலம், ஆபரணம், வன்மை, நிறைவு, செயல் என்ற அர்த்தங்களைக் கொண்டுள்ளது.
தண்டியலங்காரம் மூன்று பிரிவுகளைக் கொண்டது. பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல். பொதுவியலில் முத்தகம், குளகம் போன்ற பாவகைகள் மற்றும் செறிவு, தெளிவு போன்ற குணவகைகளும் கூறப்பட்டுள்ளன. பொருளணியியலில் தன்மை, உவமை வருகின்றன. சொல்லணியியலில் சித்திரகவி வகைகளும், மடக்கு வகைகளும், பாக்களில் வரக்கூடாத பிழைகளும் கூறப்பட்டுள்ளன.
பொதுவியல்
செய்யுளானது முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை என நான்கு வகைப்படும். முத்தகம் என்பது பிற செய்யுளோடு தொடர்பில்லாத தனிச்செய்யுள். குளகம் பல செய்யுள்களால் ஒரே நோக்கம்/பொருள்மீது பாடப்படுவது.தொகைநிலை என்பது ஒன்றைத் தொடர்தல் இன்றி ஒருவராலோ பலராலோ பாடப்படுவதும், பொருள், இடம், காலம், தொழில், பாவகை, அளவு இவை பற்றி ஒருங்கு கூட்டப்பட்டதாகும். தொகை நிலைக்கு உதாரணமாய் அக நானூறு, புற நானூறு ஆகியவற்றைச் சொல்லலாம். இவை பலரால் பாடப்பட்டு, குறித்த பொருளும், இடம், காலம், தொழில் போன்றவற்றால் தொகுக்கப்பட்டுள்ளன. களவழி நாற்பது இடம் குறித்து பாடப்பட்டவை. கார் நாற்பது காலம் பற்றி. பாடல் குறித்து தொகுக்கப்பட்டது கலித்தொகை. அளவுக்கு பதிற்றுப்பத்தும், குறுந்தொகையும். இறுதியாக, தொடர்நிலை. பொருளிலும் சொல்லிலும் இருவகைப்படும். தொகைநிலைக்கு எதிரானது இது. பொருள் தொடர்நிலைக்கு உதாரணமாய் பெருங்காப்பியமும் காப்பியமும்.
பெருங்காப்பியத்தில் என்னென்ன இருக்கவேண்டுமென்றால், வாழ்த்து, வணக்கம், நாற்பொருள்களையும் (அறம், பொருள், இன்பம், வீடுபேறு) கொண்டதாகவும், சிறந்த நாயகன் ஒருவனைக் கொண்டதாகவும், இயற்கை வர்ணனையும், புணர்ச்சி, காதல் பிணக்கு, காதல்-கலவியிற் களித்தல், உண்டாட்டு, புதல்வர் பேறு, மந்திரம், தூது, போர், வாகை சூடுதல் போன்றவற்றைத் தொடர்ச்சியுடன் வர்ணிப்பதாகவும் சுவையுடன் இருக்க வேண்டும். இதில் சொல்லப்பட்டவை ஒன்றிரண்டு குறைவுபடினும், அதுவும் பெருங்காப்பியமாகவே கொள்ளப்படும். ஆனால் நாற்பொருள்களில் ஒன்றிரண்டு குறைவுபட்டிருந்தால் அது காப்பியமாகும்.
கம்பராமாயணம், சிந்தாமணி, கந்தபுராணம் பெருங்காப்பியங்களுக்கு உதாரணங்கள். நாவல் இலக்கியங்களை ஒப்பிட்டு நோக்க எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு காப்பியவரையறைக்குள் வருகிறது. (சுவையனுபவம் விவாதத்துக்கு உரியது).
காப்பியம், பெருங்காப்பியம் இவையிரண்டிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உரைச்செய்யுள்களோடு, பாடை கலந்தும் வரும். காப்பியங்களில் உரைச்செய்யுளும் பாடலும் கலந்து இருக்கும். கதையைச் சொல்லும் போக்கில் (பாடையின்) இடையில் உரைச்செய்யுள்கள் இடம்பெற்றிருக்கும். பா என்பதில் அடி தொடை முதலிய உறுப்புகளுடன் சந்தம் பெற்று வரும். உரைச்செய்யுள் என்பதில் உரையாக ஆனால் பாடலைப்போல அடி தொடை இன்றி சூத்திரம்போல சொற்சீரடியோடு முடிவது. இந்த வடிவத்தில் கதையைச் சொன்னபடியே செல்கையில் ஆங்காங்கே வர்ணிக்கும் இடங்களில் உரைச்செய்யுள்களைக் கொண்டு நிரப்புவதைக் குறிப்பிடலாம்.
இதன் தாக்கம் வில்லுப்பாட்டு, தெருக்கூத்து முதல் இன்றைய திரைப்படங்கள் வரை தொடர்வது குறிப்பிடத் தக்கது.
அடுத்ததாக சொற்றொடர் நிலை. ஒரு செய்யுளின் முடிவு அதற்கடுத்த செய்யுளுக்கு முதலாகி வருவது சொற்றொடர் நிலை. அந்தாதி, கலம்பகம், மும்மணிக்கோவை போன்றவை இதற்கு உதாரணங்கள்.
இங்கே சொல்லப்பட்ட செய்யுள்கள் அனைத்துக்கும் இரு நெறிகள் உள்ளன. 1. வைதர்ப்பம், 2. கௌடம்.
வைதர்ப்பம்: இது விதர்ப்பதேசத்துக் கவிகளால் விரும்பிக் கைக்கொள்ளப்பட்ட நெறியாகும். (விதர்ப்பம்-வைதர்ப்பம்). இனிய சொல்லும் இனிய பொருளும் தழுவி வருவது. கௌடம்: கௌடதேசக் கவிகளால் கைக்கொள்ளப்பட்ட நெறி. கடினமான சொல்லும் பொருளும் கொண்டவை. இவை தவிர்த்து பாஞ்சாலி, மாகதம், அவந்திகை, லாடி போன்ற நெறிகளும் உள்ளன. இவை உணர்தற்கரிய சூட்சுமமுடையவை. இங்கே நெறி என்பது சொற்களைத் தொடுக்கும் சித்திரம் எனபடுகிறது. செறிவு முதல் சமாதி ஈராக பத்து குணங்களையும் உயிர்போலப் பொருந்தி வருவது வைதர்ப்பம். வீரம், மானம், வெற்றி முதலிய குணங்கள் உயிரைச் சிறப்பிப்பது போல செறிவு முதலான குணங்கள் பாக்களை சிறப்பிப்பவை. இக்குணங்களற்றவை சித்திரப்பதுமை போன்ற உயிரற்றவை வைதர்ப்பம் சொல்கிறது. அதேநேரம் கௌடம் இப்பத்து குணங்களுடன் கூடாமல் விபரீதப்பட்டு நடப்பதாயுள்ளது.
குணங்கள்:
செறிவு:
செறிவென்பது நெகிழிசை இன்றி, சொற்கள் ஒன்றையொன்று தழுவி இறுக்கமுடன் தொடுக்கப்படுவது. பொதுவாக நெகிழிசை என்பதில் வல்லினம் வராமல் மெல்லினமும் இடையினமும் அதிகம் வருவதாகும். கௌட தேசத்தார் முன்வந்த முதல் அல்லது இரண்டாம் எழுத்தே அடுத்த சொல்லிலும் அடியிலும் அதிகமும் வரும்படி அமைப்பதை விரும்பினர். இதை அநுப்பிராசம் என்பர்.
தெளிவு:
குறிப்பு மொழியாக திரிசொற்கள் இன்றி, விரைவில் புலப்படும்படி இருத்தல் தெளிவு. ஆனால் கௌடதேசத்தவர் பொருள் புலப்படாதாயினும், விசேஷப் பொருளையுணர்த்தும் சொல்லாற்றலுடையதாகத் தொடுக்கப்படுவது சிறப்பு என்பர்.
சமநிலை:
வல்லினம், இடையினம், மெல்லினம் மூன்றும் சமமாகக் கலந்து வருவது. கௌடதேசத்தவர் பொருளும் அலங்காரமும் வன்மை மிகுந்திருப்பது சிறப்பென்பர்.
இன்பம்:
தேனுண்ட வண்டுகளுக்கு உண்டாகும் இன்பம் போல சொல்லும் பொருளும் சுவைபட இருத்தல் இன்பம். கௌடதேசத்தவர் எதுகை மோனையுடன் அமைந்தவையை இன்பமென்பர். அதேசமயம் அருவருப்பு, நிந்தை, அமங்கலமற்றதாயிருத்தல் வேண்டும்.
ஒழுகிசை:
மெல்லின எழுத்துக்கள் அதிகமும் வல்லினம் சிறுத்தும் கொண்டு செவிக்கினியதாய் செறிவின்றி இருத்தல் ஒழுகிசை.
உதாரம்:
சொல்லப்பட்டவற்றில் சொல்லினாலன்றி குறிப்பால் ஒரு பொருள் உணர்த்தப்படுவது.
உய்த்தலில் பொருண்மை:
என்ன பொருளைக் கவிதை கொண்டுள்ளதோ அதை எளிதில் சொற்களில் விளக்கும் வண்ணம் இருத்தல் (அர்த்தவியக்தி). நவீன கவிதைகளில் இதற்கு நேரெதிரான போக்கு இருப்பது கவனிக்கத்தக்கது. தெரிதாவின் முள்ளெலி கவிதைக் கோட்பாட்டை குறிப்பிடலாம். மரபான சொல்லிலக்கணம் அற்ற நவீன கவிதைகளில் கவிஞர் தன் பலம் அதன் உட்செறிவில் இருப்பதாக நினைக்கிறார். எனவே கவிதை தன்னை இறுக்கிக் கொள்வது நிகழ்கிறது.
காந்தம்:
காந்தம் என்றால் மன மகிழ்ச்சி. எல்லோருக்கும் அநுசரித்து பொதுவாக அனைவரும் மகிழும்வண்ணம் சொல்லப்படுவது. கௌடதேசத்தார் உலகநடையைக் கடந்தேனும் கற்பனையால் ஒன்றை உயர்த்திப் புகழ்வதே அழகென்பர்.
வலி:
வலியென்பது தொகைநிலைத்தொடர் அதிகமாக அடுத்தடுத்து வருவது.
சமாதி:
ஒரு பொருளுக்குரியதாய் சொல்லப்படும் வினை, அதையன்றி இன்னொரு பொருளைச் சுட்டி நிற்பது. ஆக இப்பத்தும் குண அலங்காரங்கள் ஆகும்.
Comments
Post a Comment