ஒரிஸ்ஸா – சுற்றுலா - 1


ஏற்கெனவே 5 ஆண்டுகளுக்குமுன் நண்பர்களோடு ஒரிஸ்ஸா சென்றுவந்திருக்கிறேன். லிங்கராஜா கோவிலும் அக்கோவிலைச் சுற்றியுள்ள சின்னச் சின்ன கோவில்கள், அங்கே விற்கப்படும் இனிப்புகள், கோனார்க் சூரியக்கோவில் இவை திரும்பத் திரும்ப நினைவில் வந்தபடி இருந்தன. வருடத்திற்கொருமுறை குடும்பத்தினரை சுற்றுலா கூட்டிச் செல்வதாக உள்ள திட்டத்தின்படி இந்தவருடம் ஒரிஸ்ஸாவைத் தேர்ந்தெடுத்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்பே இரயில், விமானச் சீட்டுகளைப் பதிந்தாயிற்று. 4 நாட்கள் என்று திட்டமிட்ட பயணம். விமானச்சீட்டு விலை போவதற்கு விலை குறைவாயிருந்தால், திரும்பி வரும் நாளில் அதிகக்கட்டணம் இருக்கிறது. திரும்பி வரும் நாளை கணக்கு வைத்தால் கிளம்பும் நாளில் அதிகக் கட்டணம். கடைசியில் 6 நாட்கள் சுற்றுலா என்று முடிவாயிற்று.

குடும்பத்தோடு செல்லும்போது நமக்கு அத்தனை சுதந்திரம் கிடைப்பதில்லை. எல்லோருக்கும் ஒத்த ஒரு முடிவை நோக்கி நாம் நகர்ந்தபடியே இருக்கவேண்டும். சும்மா ஒரு நடை தனியே சுற்றி வருவதுகூட கடினமாகிவிடும். இந்தப் பயணத்தில் ஏனோ ஒருவித ஏக்கம், தனிமை, சுதந்திரம், துறவு இவைதான் மனதில் ஆடின. காரணம் சுந்தர். இந்தப் பையனைப் பற்றி பிறகு சொல்கிறேன்.

16 ஜூலை 2019 அன்று இரவு நெல்லை எக்ஸ்பிரஸில் சென்னைக்குக் கிளம்பினோம். அங்கு மாப்பிள்ளை வீட்டில் காலைக்கடன்களை முடித்துவிட்டு சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். நான், மனைவி, இரண்டு பிள்ளைகள், மனைவியின் அண்ணனும் அவன் மனைவியும். இரயிலில் வரும்போதுதான் கவனித்தேன். மகனுக்கும் மகளுக்கும் அடையாள அட்டைகளை எடுத்துவரவில்லை. பதட்டமாகிவிட்டது. இணையத்தில் தேடியதில், பெற்றோருடன் வரும் குழந்தைகளுக்கு அடையாள அட்டை தேவையில்லை என்று செய்திகள் கிடைத்தன. எனவே நம்பிக்கையோடு இருந்தோம். நுழைவாயிலில் பிரச்சினை இல்லை. ஆனால் போர்டிங் பாஸ் பெறும் இடத்தில் கேட்டார்கள். ஆதார் அல்லது வேறு ஏதாவது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வேண்டுமாம். கையில் ஒன்றுகூட இல்லை. அந்தப் பெண் இன்னொருவரை அழைத்தாள். குறைந்தபட்சம் பிறப்பு சான்றிதழ் அல்லது பள்ளி அடையாள அட்டையாவது தேவை என்றார்கள். கையில் ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) மட்டும் இருந்தது. அதில் இருந்த பிள்ளைகள் பெயரைக் காட்டினோம். சரி என்று விட்டுவிட்டார்கள்.

புவனேஷ்வரில் தொண்ணூறு சதவீத விடுதிகள் OYO குழுவினரின் வசம் உள்ளது. வாடகை சராசரியாய் 1000-2000. இணையத்தில் ரிசர்வ் செய்திருந்ததால் விடுதியை சரிவரப் பார்க்கவில்லை. இரண்டு படுக்கைகள் ஒரு ஹால் என அறை நல்ல வசதியாக இருந்தது. ஊரிலிருந்து விலகி ஒதுக்குப்புறமாய் இருந்தது. சுற்றிலும் நிறைய வெட்டவெளிகளோடு பசுமையாய்க் காட்சியளித்தது. விடுதியில் தண்ணீர் 30 ரூபாய்க்கு விற்கிறார்கள். மற்றபடி டீ காபி உணவு எதுவும் கிடையாது. ஒரு கி.மீ. நடந்துசென்றால் சட்டக்கல்லூரி ஒன்று வரும். அதன் அருகில் நிறையக் கடைகள் உள்ளன. அலுப்பாய் இருந்ததால் முதல்நாள் எங்கும் செல்லவில்லை. மாலைநேரம் வானம் கருத்து இடி சோம்பல் நாயைப் போல முனகிக் கொண்டிருந்தது. நான் மட்டும் ஒரு நடை வெளியே கிளம்பிச் சென்றேன்.

இரண்டாம்நாள் காலையில் சீக்கிரமே எழுந்துவிட்டோம். ஓலா செயலியில் ஒரு காரை நாள் வாடகைக்குப் பிடித்தோம். 12 மணிநேரத்துக்கு இரண்டாயிரம் ரூபாய். 120 கி.மீ. அனுமதி. புவனேஷ்வரில் கோயில்கள் எல்லாமே அருகருகே தான். முதலில் உதயகிரி, கந்தகிரி குகைகளுக்குச் சென்றோம். 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணக்குகைகள் இவை. உதயகிரியில் 18 குகைகளும், அதற்கு எதிரே உள்ள கந்தகிரியில் 15 குகைகளும் உள்ளன. ஒவ்வொரு குடைவரையிலும் பாறைக்குத் தக்கபடி ஒன்றோ பல அறைகளாகவோ, இரண்டடுக்கு அறைகளாகவோ அமைந்துள்ளன. சமணர் குகையறைகளில் வழக்கமாய் இருப்பது போலவே தலைப்பகுதிக்கு பாறையிலேயே வளைவாய் மேடமைத்து உள்ளனர். ஓர் உச்சிப் பாறையின் ஓரத்தில் இருந்த குடைவரை அறை திகைப்பூட்டுவதாக இருந்தது. எதிர்ப்புறம் பரந்துவிரிந்த சமவெளி. மேலே வானம். சிறிய அறை. சுற்றிலும் மௌனம். இதைவிடச் சிறந்த அறை வேறில்லை. இரண்டடுக்குகள் கொண்ட ஹதிகும்பா குகையறைப் பகுதியில் 17 வரிகள் கொண்ட பாலி மொழியில் எழுதப்பட்ட 17 வரிகள் உள்ளன. இவை இந்தக் குகைகளை ஏற்படுத்தித் தந்த அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றன.







x

Comments

Popular posts from this blog

புதுமைப்பித்தன் படைப்புகள் – ஒரு மீள்பார்வை

தண்டியலங்காரம்: பொதுவியல்

தீப்பெட்டி