கதை விளையாட்டு - சிறுகதை


1
இரவு நேரம். மின்சாரம் இல்லை. வெளியே சூறைக்காற்றுடன் மழை பேயாட்டம் போடுகிறது. வானம் உடைந்து விழப்போவதுபோல் இடியோசை. ’பயமாருக்குப்பா’ என்றபடி கலைவாணியும் நவீனனும் அருகில் ஒட்டிக் கொண்டனர். இருவருக்கும் பயத்துடன் கூடிய ஆர்வம். என் மனைவி சொந்தக்கார வீட்டுச் சடங்கு நிகழ்வுக்காக அவள் அம்மாவுடன் வெளியூர் சென்றிருக்கிறாள். ஒருமணிநேரமாகி விட்டது. மழை விடுகிறபாடில்லை.
‘அப்பா ஒரு கதை சொல்லப்போறேன்.’
கலைவாணி, ‘பேய்க்கதையா?’
‘ம்ம், இல்லை. இது போனமாசம் எனக்கு வந்த ஒரு கனவு’
நவீனன், ‘போனமாசம் கண்ட கனவை யாராவது ஞாபகம் வச்சிருப்பாங்களா?’
‘சில கனவு மறக்கமுடியாதுடா’
‘சரி சொல்லுங்க’
‘ஒருநாள் நீங்க ரெண்டுபேர், அப்பா அம்மா எல்லாம் குட்நைட் சொல்லிட்டுத் தூங்கப்போறோம். அப்போ…’

திடீரென்று எனக்கு முழிப்பு தட்டியது. ஒரே இருட்டு. புள்ளி புள்ளியாய் ஒளித்துகள்கள். நட்சத்திரங்கள். கையை நீட்டித் தொட்டுவிடலாம்போல, அழகழகாய் ஜொலிக்கிறது. வீட்டுக்குள்தானே படுத்திருந்தோம், எப்படி நட்சத்திரங்கள் என்று திடுக்கிட்டு உங்கள் அம்மாவைக் கூப்பிடுகிறேன். பதிலில்லை. நவீனனைக் கூப்பிடுகிறேன். பதிலில்லை. அருகில் கொலுசுச்சத்தம் கேட்கிறது. அந்தப்பக்கமாக தவழ்ந்தபடியே போனேன். வழக்கமான படுக்கைபோல இல்லாமல் வழுவழுப்பாக மெத்துமெத்தென்று இருந்தது. கலைவாணிதான் அங்கே உறங்கிக் கொண்டிருந்தாள். அவளை அசக்கி எழுப்புகிறேன். அவள் உறக்கச்சடவில் திரும்பவும் படுத்துக் கொள்கிறாள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பயமாய் இருக்கிறது. நவீனனையும் அம்மாவையும் தேடிப் போனால் பாப்பா இருக்கும் இடம் தெரியாமல் அவளையும் தொலைக்க வேண்டி இருக்கும் என்று பயந்து அவள் கையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். சீக்கிரமே விடிந்தது. கருத்த வானம் சாம்பல் நிறமாகியது. நட்சத்திரங்கள் மெல்ல மெல்ல மறைந்தன. கீழே…கீழே ஒன்றுமே இல்லை. கருப்பு நிற கம்பளம் காற்றில் அலைபோல அடித்துக் கொண்டிருந்தது. மேலே நானும் கலைவாணியும் மட்டும். தொடுவானம்வரை திசையெங்கும் கடல்போல் கம்பளம் விரிந்திருக்கிறது. கொஞ்சதூரம் ஓடிப்போய் ’நவீனாஆஆ’ என்று கத்துகிறேன். மறுபடி கத்துகிறேன். கண்ணுக்கெட்டிய தூரம்வரை ஆளே தென்படாத இடத்தில் என் குரல் யாருக்குத்தான் கேட்டிருக்கும்? கைகளால் அந்தக் கம்பளத்தைக் கிழிக்க முயல்கிறேன். அது மிருதுவாகவும் திண்ணமாகவும் இருந்தது. ஒன்றுமே செய்யமுடியவில்லை. அது மிதந்தபடி நகர்ந்துகொண்டிருப்பதை உணரமுடிந்தது.

கலைவாணி எழுந்தால் என்னாகும், அம்மாவையும் நவீனனையும் காணாமல் அவள் அழுவாளே. கொஞ்ச நேரத்தில் அவளாகவே எழுந்துவிட்டாள். வானிலிருந்து அதுவரை பார்த்திராத சிவந்த நிறத்தில் முந்திரி வடிவில் இரண்டு பழங்கள் விழுந்தன. சுவைத்துப் பார்த்தபின் கலைவாணியிடம் கொடுத்தேன். அவள் ஆர்வமாக சாப்பிட்டாள். காற்று மென்மையாக வீசிக் கொண்டிருந்தது. அவள் எழுந்து நின்று மெல்ல குதித்துப் பார்த்தாள். ஸ்பிரிங் வைத்த கட்டில்போல அது மேலே எம்பியது. அவள் குதித்து விளையாட ஆரம்பித்துவிட்டாள். வீட்டுக்குப் போவோம் வா என்று கூப்பிட்டால்கூட வரமாட்டாளோ என்று சொல்லும்படி குஷியாக இருந்தாள்.

கலைவாணி மகிழ்ச்சியாகவே நாட்களைக் கடத்திவந்தாள். இரவுதான் சோகமாகிவிடுவாள். அம்மாவும் அண்ணனும் எங்கப்பா போயிருக்காங்க. ஏன் நம்மளை விட்டுட்டுப் போயிட்டாங்க. நம்மமேல கோபமோ. நான் ஒன்னுமே செய்யலைப்பா என்று சொல்லி கண்ணீர்விடுவாள். அந்நேரங்களில் நட்சத்திரங்கள் தங்கநிறத்தில் மின்மினிப் பூச்சிகளாகப் பறந்து எங்களைச் சுற்றி வட்டமிடும். கையை நீட்டினால் வந்து அமரும். கைகளுக்குள் பொத்தியபடி அவற்றுடன் இரகசியம் பேசுவாள்.

சிலநேரம் தோன்றும். என் மனைவியும் மகனும் எங்கேதான் போனார்கள்? அவர்களைப் போய்த் தேடலாமா, திக்கெட்டும் கருங்கடலாய் விரிந்திருக்கும் இவ்வெளியில் திசைதப்பிவிட்டால் கலைவாணியை இழந்துவிடுவேனோ? எனவே அவளை நான் பிரியவே இல்லை.

அவ்வப்போது கலைவாணியுடன் கதைபேசியபடி நடந்துசெல்வேன். ஒருநாள் விடிகாலையில் நடந்துகொண்டிருந்தோம். வானம் சாம்பல் பூத்து இருந்தது. விடிவெள்ளி மின்னியது. அதை நோக்கி நடந்துகொண்டிருந்தோம். திடீரென என் கால்பரப்பில் கம்பளம் அறுந்து கீழே நழுவினேன். அனிச்சையாக கைகள் கம்பளத்தின் விளிம்பைப் பிடித்துக் கொண்டன. கீழே ஒன்றும் தெரியாதபடி புகைமூட்டமாக இருந்தது. ‘அப்பா, அப்பா, ப்ளீஸ் மேல வாங்கப்பா, போய்டாதீங்கப்பா, ப்ளீஸ்ப்பா, எனக்கு யாருமே இல்லப்பா, வந்துருங்கப்பா’ என்று கலைவாணி கதறுவதைப் பார்க்க எனக்கு அழுகை வந்தது. கைகள் வழுக்கிக் கொண்டபடி நழுவின. மேலே உந்தி ஏறவே முடியவில்லை. அழுத்திக் கீழே தள்ளியது. ‘பாப்பா, அப்பா போயாகணும். நீ அழக்கூடாது. அப்பா சீக்கிரமா வந்துருவேன். சீக்கிரமே குட்டிப் பாப்பாவா திரும்ப வருவேன். அழக்கூடாது, அழக்கூடாது…’ நழுவி நழுவி நழுவி விழுந்தேன்.

கிழிந்த சுவடே தெரியாமல் கம்பளம் மூடிக்கொண்டது. கலைவாணி அப்பா, அப்பா என்று கதறியபடி கம்பளத்தை விலக்க முயன்றுகொண்டிருந்தாள். வானத்தைப் பார்த்து அழுதாள். அது மௌனமாக இருந்தது. ரொம்பநேரம் அழுதவள் அங்கேயே சுருண்டு படுத்துவிட்டாள். இரவில் அவள் கண்விழித்தபோது மின்மினிகள் வானில் அவளுக்காக படங்கள் வரைந்துகொண்டிருந்தன. அதில் அவளுக்குக் கதை சொல்லின. அப்படியே உறங்கிவிட்டாள்.

தொலைப்பதற்கு யாருமில்லை என்பதால் கலைவாணி கால்போன போக்கில் நடந்தாள். அப்பாவுடன் பேசியவைகளை நினைத்துச் சிரிப்பாள். அவரை நினைத்து அழுவாள். ஒருநாள் இப்படி நடந்துகொண்டிருந்தபோது தூரத்தில் ஒரு சிறுவன் வந்துகொண்டிருந்தான். கலைவாணி திகைத்து ஒரு கணம் நின்றுவிட்டாள். பின் அவனை நோக்கி ஓடினாள். கிட்டேபோய் அவன் கையைப் பிடித்துக்கொண்டாள்.
‘நீ இங்க ரொம்பநாளு இருக்கியா’
‘ஆமா, எங்கப்பா கீழ போய்ட்டாங்க. நாமட்டும் தனியா இருக்கேன். நீயும் தனியாவா இருக்கே?’
’ஆமா, அங்கே அந்தா மேகம் சிவப்பாத் தெரியுதுல்ல, அங்கருந்து வாரேன்.’
அவர்கள் இருவரும் நட்பானார்கள். இருவருமாகச் சேர்ந்து புதிதுபுதிதாய் விளையாட்டுக்களைக் கண்டுபிடித்து விளையாடுவார்கள். களைத்துப் போய் வானத்தை வெறிப்பார்கள். மேகங்களை வைத்து அவன் கதை சொல்வான். அவள் கேட்டுக் கொண்டிருப்பாள். கம்பளம் மெதுமெதுவே மென்னலையாய் விசிறியபடி படபடத்து நகரும்.
நாட்கள் ஓடின. ஒருநாள் விடிகாலைப் பொழுது. கலைவாணி கண்விழித்ததும் விடிவெள்ளியைத்தான் பார்த்தாள். அவளுக்கு இதுவொரு வழக்கம். அதோடு தினமும் எழுந்ததும் பேசுவாள். அப்பா கடைசிநாள் தன்னைவிட்டுப் போகையில் விடிவெள்ளி இருந்தது. அதற்குத் தெரியும். கம்பளத்துக்கு அடியில் அப்பா விழுந்ததை அதுதான் பார்த்தது. படுத்தபடி அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். விடிவெள்ளி பிரகாசித்தது. எழுந்து அதை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். முடிவே இன்றி நீண்டுகொண்டிருந்தது கம்பளம். தூரத்தில் குழந்தை அழும் ஓசை கேட்டு திடுக்கிட்டாள். அப்படியே மெய் சிலிர்த்தது. அங்கிருந்து குரல்வந்த திசை நோக்கி ஓடினாள். சிவப்பு நிறத்தில் சூரியப் பந்து எழும்பி மென்மையாய் ஒளிவீசியது. பொன் போல மின்னியபடி குழந்தையொன்று அங்கே கிடந்தது. அழுதுகொண்டிருந்தது. கைகளில் அள்ளியெடுத்து மார்போடு அணைத்து கலைவாணி ஏங்கி ஏங்கி அழுதாள்.
அந்தப்புறமாய் திரும்பிப் படுத்தபடி நவீனன் தேம்பிக் கொண்டிருந்தான். கலைவாணி எப்போதோ உறங்கியிருந்தாள்.

2
நவீனன், ’ரொம்ப நல்லாருக்குப்பா. எனக்குக்கூட நான் பர்ஸ்ட் ஸ்டேண்டர்ட் படிக்குறப்ப கண்ட கனவு ஞாபகம் இருக்கு’
’அடேயப்பா, மூனுவருசமா ஞாபகம் வச்சிருக்கியா’
‘ஆமா. அது நல்லா ஏதோ ஒரு கார்ட்டூன் கதை மாதிரி இருந்ததா, அதனால நான் மறக்கவேயில்ல’
‘சொல்லேன் கேக்கலாம்’
‘ஒருநாள் நம்ம பழையவீட்ல இருக்கும்போது நைட்டு தூங்கறப்ப, தண்ணிதாகம் எடுத்து முழிச்சுக்கிட்டேன். அப்ப…’
அடுப்பறையில் போய் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தால், ஓர் உருவம். பார்த்ததும் அப்படியே நான் மயங்கி விழுந்துவிட்டேன். கொஞ்சநேரத்தில் விழிப்புத்தட்டியது. அடுப்பறைத் திண்டில் அம்மா தக்காளியாக மாறி அமர்ந்திருந்தார். நவீனா, அம்மாவைக் காப்பாற்று என்று கதறினார். அப்பா, பக்கத்தில் கத்தரிக்காயாக மாறியிருந்தார். படுக்கையறையில் கலைவாணி தூங்கிக் கொண்டிருந்தாள். நான் சின்னப்பையன். இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட பாபாதான் உதவிசெய்யமுடியும். அவரைப் பார்க்கக் கிளம்பினோம்.

கஷ்டப்பட்டு மலையேறி பாபா இருக்கும் இடத்துக்குச் சென்றோம். எங்கள் பிரச்சினையைக் கூறியதும், பாபா சொன்னார்,
‘இந்தப் பிரச்சினையில் இருந்துவிடுபட நீ ஐந்து மலைகளைத் திறக்க வேண்டும். அதனுள் இருக்கும் மூலிகையை சேகரித்துக் கொண்டுவந்தால் உன் அப்பா அம்மா பழையபடி உருமாறி விடுவார்கள். உன்னால் இதை சாதிக்க முடியும்.’
‘ஆனா பாபா அந்த மலைகள் எங்கே இருக்குன்னு எனக்குத் தெரியாதே. நான் சின்னப்பையன், என்னால் தூரத்தில் இருக்கற இடங்களுக்கு எப்படிச் செல்லமுடியும்?’
‘இந்தா, இந்த பறக்கும்தட்டை வைத்துக்கொள். இது உன்னை போகவேண்டிய மலைக்குக் கூட்டிச் செல்லும்’
நானும் கலைவாணியும் தட்டில் ஏறி முதல் மலைக்குச் சென்றோம். உயரமான கரும்பாறையாலான மலை. முன்புறம் ஏற வழியின்றி செங்குத்தாக உயர்ந்து சென்றது. கதவு எங்கே இருக்கும் என்று தேடினோம். கலைவாணி ஊதா நிறத்தில் ஓர் அடையாளத்தைப் பார்த்து அதை அழுத்தவும், முன்புறம் கதவுவடிவில் பாறைவிடுபட்டு உட்புறமாகத் திரும்பியது. உள்ளேயிருந்து உயரமாய் குண்டாய் ஓர் அரக்கன் வெளிவந்தான். எங்களைப் பிடித்துத் திங்கப் போவதாகப் பயமுறுத்தினான். ஒரு பருந்து பறந்துவந்து கலைவாணியைத் தாக்கியது. பாபாவை மனதில் நினைத்துக் கொண்டேன். பாபா அங்கே தோன்றி,
‘நவீனா, இவனை உன்னால்தான் கொல்லமுடியும், இந்தா இந்த கத்தியை வைத்துக்கொள்’ என்று ஒரு கத்தியைக் கொடுத்தார். நான் அந்தக் கத்தியால் அந்த அரக்கனின் தொந்தியில் குத்தினேன். கலைவாணி அந்தப் பருந்தின் கழுத்தைப் பிடித்து நெறித்து முறித்துப் போட்டாள். நாங்கள் உள்ளே நுழைந்தோம். உள்ளே ஒரு கதவின் நடுப்புறம் கற்கள் உடைபட்டு சிதறிக் கிடந்தது. அதைப் பொருத்தினால்தான் கதவு திறக்கும். சிதறிக்கிடந்த கற்களை ஒன்றுசேர்த்து ஒட்டினோம். ஆனால் அதன் மையப்பகுதியில் இருக்கவேண்டிய பாறைத்துண்டு இல்லை. எல்லா இடமும் தேடிவிட்டோம். பாபாவை மனதில் நினைத்து வேண்டினேன். பாபா தோன்றி,
‘நவீனா, அந்த நடுப்பகுதிப் பாறைக்குரியது உன் மனம்தான். மனதை ஒருமைப்படுத்தி தியானி. கதவு தானாகத் திறக்கும்’
நான் தியானித்தேன். அப்போது,
‘ஏலே நவீனா. எவ்வளவு நேரமா தூங்கிக்கிட்டிருப்பே. இப்ப எந்திக்கலை, வந்து அடி பிச்சுப்புடுவேன்’
அப்டின்னு அம்மா எழுப்பவும் எந்திரிச்சிட்டேன்.”

Comments

Popular posts from this blog

புதுமைப்பித்தன் படைப்புகள் – ஒரு மீள்பார்வை

தண்டியலங்காரம்: பொதுவியல்

தீப்பெட்டி