ஹொய்சாளம் பயணக்கட்டுரை - 1


ஹொய்சாளம் - பயணக்கட்டுரை 1


மதுரையிலிருந்து இரவு எட்டு மணிக்கு மைசூர் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. திருமணத்திற்குப் பிறகு நான்காண்டுகள் நண்பர்களுடன் பிரயாணம் சாத்தியப்படவில்லை. அதற்கு முன் வருடம்தோறும் பொங்கலையொட்டி எங்காவது சென்றுவிடுவோம். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பிரயாணிக்கிறோம். மொத்தம் எங்களுக்கு நான்கு நாட்கள் இருக்கின்றன. இரண்டு நாட்கள் ஹொய்சாளர் காலச் சிற்பங்களைப் பார்த்துவருவதாகத் திட்டம். மீதி இரண்டுநாட்கள் முதுமலை மற்றும் ஊட்டி. என் கல்லூரிக் காலத்து நண்பர்கள் கண்ணன் மற்றும் அமர்நாத்துடன் பிரயாணிக்கிறேன். கண்ணன் சென்னையில் மெடிக்கல் ஷாப் வைத்திருக்கிறார். அமர்நாத் அரசலுவல். நானும் அமர்நாத்தும் மதுரையிலிருந்து கிளம்ப, கன்ணன் சென்னையிலிருந்து கிளம்பினான். இரயிலில் பிச்சைக்காரர்கள் பத்துநிமிடத்துக்கொருமுறை வந்தபடியே இருந்தனர். திருநங்கைகள் ஐந்தாறுமுறை வந்திருப்பார்கள். டாய்லெட் படுமோசம். சில டாய்லெட்டுகள் ஓவர்ஃப்ளோ ஆகி நாறடித்துக் கொண்டிருந்தது. கடுமையான குளிர்.


பெங்களூர் தாண்டி ஒரு ஸ்டேஷனில் இறங்கிப்பார்த்தேன். தோசையளவுக்கு இட்லி வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். வாங்கிச்சாப்பிட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தேன். சட்னியைப் பார்த்ததும் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். காலை ஆறுமணிக்கு ஒரு பெண் சொல்லாமல் கொள்ளாமல் எங்கள் இருக்கையில் வந்து அமர்ந்தாள். பெருமூச்சு விட்டுக்கொண்டோம். வடக்கே செல்லச்செல்ல இப்படித்தான். மூன்று மணிநேரத்துக்குப் பிறகு டிடியார் வந்தார். அந்தப் பெண் சாதாரண டிக்கெட் எடுத்து ரிசர்வேஷனில் ஏறியதால் நூறு ரூபாய் ஃபைன் என்று இரசீது போட்டுப் பணம் வாங்கிவிட்டுச் சென்றுவிட்டார். இப்படிச் செய்தால் அவர்கள் சந்தோஷமாக இதே தவறைத்தானே திரும்பச் செய்வார்கள்?


காலை பத்துமணிக்கு மைசூர் சென்றடைந்தோம். கண்ணன் ஆறுமணிக்கே சென்றுவிட்டதால் ஒரு லாட்ஜில் ரூம் ஏற்பாடு செய்திருந்தான். சாதாரணமான லாட்ஜ். படுமோசம் என்றுதான் சொல்லவேண்டும். சென்னையின் முக்கியமான பகுதிகளில் எப்படி இண்டு இடுக்குகளில் கூட அதை நிரப்பி ஏதாவது தொழில் நடத்துவார்களோ, அதைவிட மோசமாக இருந்தது அறை. வாடகை சற்று அதிகம்தான். அரைநாள் வாடகை எழுநூறு ரூபாய். குளித்துவிட்டு சோமநாதபுரம் கிளம்பினோம்.


சோமநாதபுரம் மைசூரிலிருந்து 35 கி.மீ. ஆட்டோ பிடித்தோம். அந்த வழியில் பஸ் போக்குவரத்து அதிகமில்லை. ஒவ்வொரு பஸ்ஸிலும் நல்ல கூட்டமிருக்கிறது. சிற்றிலும் விவசாய நிலங்கள்தான். அறுவடை முடிந்து ஆங்காங்கே வைக்கோல் போர் குவித்து வைக்கப்பட்டிருந்தன. புழுதி பறக்கும் பழுப்பு நிற மண். இங்கு சென்னகேசவர் ஆலயம் இருக்கிறது. (நுழைவுக்கட்டணம் ஐந்து ரூபாய். அயல்நாட்டவருக்கு ரூ. 100). முன்புறம் இடப்பக்கத்தில் அருங்காட்சியகம் இருக்கிறது. நாங்கள் போகையில் பூட்டிக்கிடந்தது. நீண்டு பரந்த புல்வெளி நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.


இக்கோவில் பதிமூன்றாம் நூற்றாண்டில் மூன்றாம் நரசிம்மரின் ஆட்சிக்காலத்தில் அவரது தளபதியான தண்டநாயக்கர் என்ற சோமர் என்பவரால் கட்டப்பட்டது. சோமநாதபுரம் என்ற ஊர்ப்பெயரும் இவரது பெயராலேயே வழங்கப்பட்டது. இந்தப் பகுதி முதலில் சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. ஹொய்சாள மன்னர் விஷ்ணுவர்த்தனால் கி.பி. 1117 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்டது. பின்னர் விஜயநகரப் பேரரசினாலும் அதன்பின் மைசூர் உடையார்களாளும் ஆளப்பட்டது. கிழக்கு நோக்கியிருக்கும் இந்த ஆலயம் மூன்று கருவறைகள் கொண்டது. இவ்வகைக்கு திரிகுடாச்சலம் என்று பெயர். கருவறைகள் மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு நோக்கி உள்ளன. மேற்கு நோக்கியிருக்கும் கருவறையில் கேசவர் மூலவராக வீற்றிருக்கிறார். தெற்கில் வேணுகோபால். வடக்கில் ஜனார்த்தனர்.


கேசவர் கோவிலுக்கு நாங்கள் செல்கையில் ஒருசில அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், ஒரு பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்த முப்பதுக்கும் குறைவான குழந்தைகளும் இருந்தனர். சப்தங்களை மீறி அமைதி ஆக்கிரமித்திருந்தது. சப்தங்களே மௌனத்தை உணர்த்துவது போல, மௌனத்தின் உச்சாடனம் போலிருந்தது.


அதிகபட்ச சிற்ப வேலைப்பாடு கொண்ட கோவில் இது. மிக நுணுக்கமாக அரைவிரல் அளவுக்கெல்லாம் சிற்பங்கள் உள்ளன. தெய்வங்களின் முகங்கள் வித்தியாசமாய் இருந்தன. அருள் கூர்ந்து, கருணை பொங்கும், மர்மப் புன்னகை புரியும் தமிழ்நாட்டுக் கடவுள் முகங்கள் இல்லை. இவை எங்கோ தூரத்தில் நிற்கின்றன. சிற்பங்கள் புடைப்பாய் இன்றி, இருப்பதில் செதுக்கிச் செதுக்கி, மிக நுண்ணிய துளைகள் இட்டு பற்பல வடிவங்களையும், அழகுபடுத்தியிருக்கிறார்கள். காதை அடைக்கும் அளவுக்கு கோயிலினுள் ங்கொய் என்று அமைதி அறைகிறது. பார்த்துப் பார்த்து திகட்டாத தூண்கள். அத்தனை பிரமாண்டமாய் நிற்கின்றன. ஒவ்வொன்றும் உருளையின் பல்வேறு வடிவங்களிலோ, சின்னச் சின்ன சிற்ப வேலைப்பாடுகளுடனோ காணப்படுகின்றன. இந்தச் சிற்பங்கள் மற்றும் தூண்கள் சோப் ஸ்டோன் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஒருவகை மாவுக்கற்களால உருவாக்கப்பட்டவை. இது புகழ் பெற்ற சிற்பியும் கட்டிடக்கலைஞருமான ருவாரி மலிதம்மா என்பவரால் கட்டப்பட்டது. கோவிலைச் சுற்றிலும் தூண்களால் தாங்கப்பட்ட ஐம்பத்திரண்டு சுற்று மண்டபங்களும் உள்ளன. கோவிலின் அடிப்புறத்தை நட்சத்திர வடிவிலான தளம் தாங்கி நிற்கிறது. மேலுள்ள விமானங்களும் அதே வடிவத்தில் உள்ளது.



































கோவிலின் வெளிப்புறத்தில் கற்களிலேயே செதுக்கப்பட்டு காற்றும் ஒளியும் போதிய அளவுக்கு நுழையும் வண்னம் ஜன்னல் அமைப்பு உள்ளது. அதற்குக் கீழே கீழிருந்து யானைப்படை, குதிரைப்படை, யாழி, மக்களின் வாழ்வியல்-விழாக்கள் என்று வரிசையாய் காணப்படுகின்றன. இவற்றில் பல சிற்பங்கள் அரைவிரல் அளவே உள்ளன. இதற்கும் மேல் காண்டாமிருக உடலமைப்பில் உள்ள விலங்கு வரிசை. அதற்குமேல் அன்னப்பறவைகளின் வரிசை. ஜன்னலுக்கும் இந்தச் சிற்ப அடுக்குகளுக்கும் இடையில் முழங்கை உயரம் உள்ள வெவ்வேறு தெய்வங்கள். இது வைணவக் கோவிலாக இருந்தாலும் வெளிப்புறத்தில் சிவ பார்வதி சிற்பங்களும் உள்ளன. கூரைமேல் வெவ்வேறு வடிவங்களில் பல சிற்பங்கள் உள்ளன. கீழ்நோக்கிக் குவியும் தாமரை வடிவம், பின்னிக்கிடக்கும் சர்ப்பம், தெய்வங்கள் இப்படிப் பல.



வெளியே வரும்போது மதியம் 2.30. ஒரு ஷேர் ஆட்டோ பிடித்து அன்னூர் வந்தோம். பஸ் ஸ்டாண்டில் உள்ள ஒரு சாதாரண ஓட்டலில் சாப்பிட்டோம். கர்நாடகா பொன்னி அரிசியில் சாதம். திருப்தியாக இருந்தது. தாளித்த மோர் இரண்டு முறை கேட்டு வாங்கிக் குடித்தேன். சாப்பாடு நாற்பது ரூபாய் தான். அங்கிருந்து மைசூர். மைசூரிலிருந்து ஹசன் வந்தோம். அது நான்கு மணிநேரப் பயணம். எப்போதும் பஸ்ஸில் நல்ல கூட்டம் இருக்கிறது. ஹசனில் ரூம் வாடகை ரொம்பக் கம்மி. மூன்று பேர் தங்க பேமிலி ரூம் கொடுத்தார்கள் (இரண்டு தனிப் படுக்கைகள் ஒரு இரட்டைப் படுக்கை). வாடகை ரூ. 650 தான். கீழேயே ஓட்டல் இருந்தது. அங்கேயே சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுத் தூங்கினோம். நாளை ஹளபீடு மற்றும் பேளூர் செல்ல வேண்டும்.

Comments

Popular posts from this blog

புதுமைப்பித்தன் படைப்புகள் – ஒரு மீள்பார்வை

தண்டியலங்காரம்: பொதுவியல்

தீப்பெட்டி