பெரிதினும் பெரிது கேள்
23/06/2017ல் எழுதப்பட்ட கட்டுரை:
சமகாலத்தில் இலக்கிய உலகில் நுழையும் புதிய எழுத்தாளர்களில்கூட சிலர் 'கவிஞர்' என்ற துண்டைப் போட்டுவிட்டுத்தான் உள்ளே நுழைகிறார்கள். பின்னர் சிறுகதை, நாவல்கள் என்று அவர்கள் களம் விரிந்தாலும்
இந்த 'கவிதை' என்னும் நுழைவுச்சீட்டு அவர்கள் பயணத்தை எளிதாக்குகிறது. இத்தனைக்கும் இன்றைய
காலகட்டத்தில் அதிகபட்ச புறக்கணிப்புக்கு ஆளாவது கவிதைப் புத்தகங்களே. கவிதைகளின்
தனிச்சிறப்பானது,
அது கவிஞர்களால்
மட்டுமே படித்து அனுபவிக்கத்தக்கதாயிருப்பது தான். வேறெங்கும் இல்லாத அளவு
தமிழ்நாட்டில் தமிழ் தெரிந்தவரெல்லாம் கவிதை எழுதுகிறேன் என்று கிளம்பினாலும், நாம் அவற்றை கணக்கில் எடுக்கவில்லை.
இலக்கியத்தரமான கவிதைகளையே இங்கு குறிப்பிடுகிறோம். கவிதை வாசிப்பு இந்த
இலட்சணத்தில் இருக்கும்போதும் வருடத்திற்கு இருபது தொகுப்புகளாவது
வந்துவிடுகின்றன. சும்மாயிருக்க வெட்கப்பட்டு, கல்யாணம் பண்ணப்போகும் மாப்பிள்ளை கடை வைத்துக் கொள்வது போலத்தான் இது.
இவற்றில் பெரும்பான்மையானவை, சொந்தக்காசைப் போட்டு பதிப்பித்துக் கொள்கிறார்கள். அச்சில் ஒருவரது
எழுத்துக்கள் (இங்கே படைப்பு என்று சொல்லக் கொஞ்சம் சங்கோஜமாக இருக்கிறது) வருவது
பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
இலக்கியம் என்பதே அகங்காரச் செயல்பாடு என்று நண்பர் ஒருவர் கூறினார். இது
எழுத்தையும் எழுத்தாளனையும் ஒன்றாகப் பார்ப்பதில் வரும் சிக்கல். பெயரில்லாமல்
வெறும் படைப்புகள் மட்டும் வந்தால் அதில் அகங்காரம் எங்கிருக்கிறது? அப்படி யாரும் செய்யப்போவதில்லை என்பதால்
இந்தக்கூற்றை விட்டுவிடுவோம்.
நாம் முக்கியமாய் கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வியானது (நாம் என்று இங்கு நான்
குறிப்பிடுவது,
இந்தக்
கட்டுரையை வாசிக்கும் நீங்கள், கவிஞர்கள்,
கவிதை
வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள்) சம காலத்தில் செறிவான சிந்தனையுடன், நல்ல மொழி இலயத்துடன் எழுதப்படும் கவிதைகள்
அத்தனையையும் இந்த இரண்டு காரணங்களால் கவிதைகள் என்று ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா? மரபுக் கவிதைகளிலிருந்து தன்னை முற்றிலும்
துண்டித்துக் கொண்டு,
முற்றிலும்
இலக்கணத்தை மீறி எழுதப்படும் புதுக்கவிதைகளுக்கு அதன் பேசுபொருள், கவிதையின் அகம் சார்ந்தும் வடிவமின்றித்தான்
எழுதிக் கொண்டிருக்கப் போகிறோமா? நூறாண்டுகள் ஆகியும் எவ்வித முறைப்படுத்தலோ, வரையறைகளோ இன்றி 'கடவுளென்றால் கடவுள்; கல்லென்றால் கல்' என்பதுபோலத்தான் கவிதைகளை வைத்துக்
கொண்டிருக்கப் போகிறோமா?
ஒரு புகழ்பெற்ற
கவிஞர்கூட சமயங்களில் சாதாரணமான கவிதை எழுதிவிடும்போது அத்தகைய கவிதைகளை இனங்கண்டு
சுட்ட நம்மிடல் உள்ள அளவுகோல்கள் என்னென்ன? அல்லது அவர் பெயர் ஸ்தாபிக்கப்பட்டு விட்டதால் கவிதையென்று அவர்
எழுதுவதையெல்லாம் கவிதைதான்; நம் இரசனைக்கேற்றவாறு 'பிடித்திருக்கிறது', 'பிடிக்கவில்லை' என்றளவில் விமர்சனத்தை நிறுத்திக்கொள்ளப் போகிறோமா?
மரபுக்கவிதையில் கவிதைகளுக்கான வடிவங்கள் வரையறுக்கப்பட்டிருந்தன. கவிதை
பேசும்பொருள் வரையறை இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் மரபு வழிக்கல்வி மற்றும்
கலாச்சாரத்தின் கண்ணி அறுபட்டது. இன்று நமது சங்க இலக்கியத்திலிருந்து தனது மரபை
அடையாளம் கண்டு தனது இலக்கியப் பயணத்தைத் தொடங்குபவர்கள் அரிதாகிவிட்டனர்.
அந்தரத்தில் எந்தச்செடியும் முளைப்பதில்லை. இன்றும் மரபுக்கவிதைகளை சிலர்
முயற்சிக்கிறார்கள். பிரச்சினையென்னவென்றால் சரியான வார்த்தைகளுக்கு யத்தனிக்கும்போது
கவிதையின் ஆன்மா போய்விடுகிறது.
பின்னர் இவர்கள் எழுதுவதே நான்குபேர் பார்த்து, வாசித்து பாராட்ட வேண்டும் என்றுதானே. மரபுக்கவிதையில் பரிட்சயம் இல்லாமல் அதை
யாரும் வாசிக்க இயலாது என்பதால் அதில் பெரும்பாலும் யாரும் ஆர்வம்
செலுத்துவதில்லை. அப்படியான முயற்சிகள் ஒரு கழைக்கூத்தாடியின் வித்தை என்ற
அளவிலேயே பார்க்கப்படுகின்றன.
இன்று செறிவான அர்த்தம் தரக்கூடிய முன்னர் புழக்கத்திலிருந்த மற்றும் சங்கப்
பாடல்களில் எடுத்தாளப்பட்ட வார்த்தைகள் நம்மிடம் இல்லை. புழக்கத்திலுள்ள சில
ஆயிரம் வார்த்தைகளை வைத்துக்கொண்டு, கவிதையின் படிமங்களின் அடர்த்தியைக் கொண்டு நவீன கவிதைகள் நிற்கின்றன. கொஞ்சம்
சிந்திக்கும்,
தமிழில் நல்ல
பரிட்சயமுள்ள யாராலும் கவிதையெழுதி நான்குபேர் மெச்சும்படி பாராட்டுப் பெற்றுவிட
முடியும். இவ்வளவுதானா கவிதை? கவிதைக்கு ஆன்மா உண்டு;
தனித்த உயிர்
அது;
எழுத்தாளனை மீறி
நடக்கும் படைப்புச் செயல் என்றெல்லாம் சொல்வது ஏமாற்றா?
வசீகரமான வார்த்தைகளைப் போட்டு, தீவிரமான கவிதைகள் என்றொரு பிம்பத்தைச் சில கவிஞர்கள் கட்டமைக்கிறார்கள்.
சாரமில்லாமல்,
உயிரில்லாமல்
செத்துக்கிடக்கும் அந்த வார்த்தைக்குவியல் எப்படி எழுந்து நிற்கிறது?
இந்தக் கேள்விகளுக்கான பதிலை நாம் சில உதாரணங்கள் மூலம் பார்ப்போம். இங்கு ஒன்றை நினைவு படுத்த
விரும்புகிறேன். யாரும் வேண்டுமென்றே மோசமான, உயிரில்லாத கவிதைகளை எழுதுவதில்லை. எழுதியபின் அதன் மாயாஜால நடை, வசீகர மொழிகண்டு எழுதியவரே அதன்மேல்
காமுறுகிறார். அது கவிதை என்றும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது என்றும்
நம்புகிறார். இத்தகு நம்பிக்கையைத் தகர்ப்பதும், ஆன்மா கொண்ட கவிதைகளை சுட்டிக் காட்டுவதுமே நமது நோக்கம். நாம் இரண்டு
கவிஞர்களின் கவிதைகளை வைத்துப் பேசுவோம்.
மனுஷ்ய
புத்திரன்:
இவரது கவிதைகள்
நாம் உலகத்திற்கு நம்மைக் காட்டிக்கொள்வதற்கும் உள்ளே இருப்பதற்குமான வேறுபாட்டை, அதன் அபத்தத்தை, இரகசியத்தை அழகான வார்த்தைகளில்
தீட்டுகின்றன. சில கவிதைகள ஒரு சிறுகதையளவுக்கு நீள்கின்றன. அதீதத்தின் ருசி என்ற
இவரது கவிதைத்தொகுப்பின் முதல்கவிதை 'சிநேகிதிகளின் கணவர்கள்' (நாம் சிநேகிதனின் மனைவி என்றும் வைத்துப் பார்க்கக்கூடும்). எப்படி இவ்வளவு
நுணுக்கமாக இதைச் சித்தரித்துவிடுகிறார் என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துவது. மிக எளிய
வரிகளில்,
வார்த்தைச்
சிடுக்குகள் ஏதுமின்றி நேரடியாக அருகிலிருக்கும் நண்பனிடம் உரையாடுவதுபோல அத்தனை
அழகாக தூரிகை போல ஒரு சித்திரத்தைத் தீட்டுகிறது. சமயங்களில் ஒரு சிறுகதையைச்
சாறாக்கி வாசிப்பதுபோலவே இருக்கிறது. இந்தக் கவிதை ஒரு உறவுச்சிக்கலைப் பேசுகிறது.
தோழியின் கணவனுடன் ஒரு பொதுத்தளம் இன்றி உரையாட வேண்டி நேர்வதின் அபத்தம், வெற்றுச் சிரிப்புகள், ஜோக்குகள், தேவையற்ற மெனக்கிடல்கள் என்று அத்தனைக்கும் பின்னிருக்கும் மனம்-செய்கை
இரண்டையும் விவரிக்கிறது. இது ஒரு சிறுகதைக்கான அழகான கரு. கதையில் சம்பவங்களை
உருவாக்கி அதில் உள்ளூற உறையச் செய்யவோ அல்லது மனவோட்டமாகவோ சொல்லிச் செல்ல வேண்டிய
வரிகள் கவிதையாக பரிணமிக்கின்றன. இவரது கவிதைகள் தண்ணீருக்குள் அலையும் மீன்போல
உள்ளுக்குள் சதா ஓய்வின்றித் திரியும் அல்லது கணநேரம் நின்று நோக்கும் மனதைச்
சித்திரமாய்,
வரிகளாய்
உருவெடுக்கின்றன.
இந்தத் தொகுப்பில் உள்ள கடைசிக்கோப்பை (பக்கம் 136) மனுஷ்யபுத்திரனின் நாம் குறிப்பிட்டுச் சொல்லும் அகத்தை விளக்குதல், பொருளை விளக்குதல் போன்றவற்றுக்கு சிறந்த
உதாரணமாகச் சொல்லலாம். கடைசிக்கோப்பை மதுவை அருந்துவது பற்றிச் சொல்கிறது
இந்தக்கவிதை. கடைசிக்கோப்பை மதுவை அருந்தும்போது இருக்கும் உணர்வை மிகத் தெளிவாகப்
படம்பிடித்துவிடுகிறது. ஒவ்வொரு பொருளுக்கும் சம்பவத்துக்கும் உள்ள அரூபமான
தன்மைகளை தத்ரூபமாகச் சொல்லிவிடுகிறார். இவரது பெரும்பான்மையான கவிதைகளில்
இந்தத்தன்மை கைகூடிவிடுகிறது. இதுவே இவரது பலம். இந்த இயல்புக்குமீறி மாயத்தோற்றம்
கொண்ட கவிதைகூட எழுதியிருக்கிறார். (உதாரணத்திற்கு கடலுக்கு அடியில் ஒரு நூலகம்
என்ற கவிதை;
பக்கம் எண்: 150). ஆனாலும் அதில் மற்ற கவிதைகளைப் போலவே நடை, அதேபோன்ற ஒவ்வொன்றாய் விரித்து
அர்த்தப்படுத்தும் பாங்கைக் காணலாம். சில நேரங்களில் வெவ்வேறு கோணங்களில்
காட்சியைக் காணும் ஒரு கேமரா போல இருக்கின்றன அல்லது சுற்றிச் சுற்றிப் பறந்து ஒரு
கிளைமீது வந்தமரும் பறவை போல. இதற்கு உதாரணமாய் கேட்கக்கூடாத கேள்விகள் (பக்கம்: 165)-ஐச் சொல்லலாம்.
இவர் மீது நாம் என்ன விமர்சனத்தை வைக்கமுடியும்? வாசிக்க இவரது கவிதைகள் அருமையாக இருக்கின்றன; வார்த்தைகளாய் உருவாகாமல் நம் எல்லோர் மனத்திலும் இருக்கும் உணர்வுகளை
மிச்சமின்றிச் சொல்கின்றன;
எல்லோரும்
வாசிக்க இயலும் எளிய வார்த்தைகள். உள்ளிருக்கும் உணர்வுகள் வார்த்தைகளாக இரத்தமும்
சதையுமாக முகத்தில் அறைவதுபோல வந்து நிற்கின்றன. இதை வாசிக்கும் எதிர்க்
கருத்துள்ளவர்கூட முணுமுணுப்புடன் தலைகுனியக்கூடும். ஆனால் இவையெல்லாமே நம்
அறிதலுக்குட்பட்டவை. அதாவது வெளிப்பேச்சு /நடத்தை vs மனம் இவற்றைப் பற்றித்தான் இதன் முரண், ஊடுபாவாய் இரண்டுமாய் இருக்கும் இருத்தல் பற்றி மீண்டும் மீண்டும் பேசுகின்றன.
இதைத் தாண்டி எவ்வித தரிசனத்தையோ, அமானுஷ்யங்களையோ இந்த வரையறை தாண்டிச் செல்லும் பாய்ச்சலையோ
பார்க்கமுடிவதில்லை. அகத்தைப் பற்றியே பேசினாலும் இவரது கவிதைகளில் அத்தனை
ஆழமில்லை. ஆழம் என்று சொல்லும்போது மேம்போக்காகச் சொல்லிச் செல்பவை என்ற
அர்த்தத்தில் சொல்லவில்லை. இவரது கவிதைகள் அச்சு அசலாக அப்படியே உணர்வுகளை
வார்த்தைகளில் நகலெடுத்து,
வர்ணமிட்டுத்தான்
வருகின்றன. ஆயினும் அந்த இடம்தாண்டி அவர் நகர்வதில்லை. சாதாரணமாய் நடக்கும்
சம்பாஷனைகள்,
தனித்த
பொழுதுகளில் இருக்கும் மனநிலையை இவரால் பிரமாதமாக வார்த்தைப்படுத்திவிட முடிகிறது.
இவரது பெரும்பாலான கவிதைகள் நாம் அன்றாடச் சம்பவங்கள், உறவுச்சிக்கல்கள், சமூகச்சிக்கல்கள் பற்றிப் பேசுகின்றன. நமது
மனதில் பதியும் உணர்வை ஊசிமுனையளவே தொட்டு தனது தர்க்கபுத்தி கொண்டு வரிவரியாக
விவரிக்கிறார். அகத்துக்கான என்சைக்ளோபீடியா போல, அந்த நிகழ்வு,
முடிச்சு
குறித்து முற்றிலுமாக விளக்கி திரும்ப எடுத்த இடத்திலேயே வைக்கப்படுகிறது. இவை
ஒருவகையில் விளக்கவுரைகள் போலவே இருக்கின்றன. அதாவது பொருட்கள், மனிதர்கள், சம்பவங்கள் இவை எப்படியானவை, எப்படியிருக்கின்றன என்பதைத் திரும்பத்திரும்ப வெவ்வேறு வார்த்தைகளில் அல்லது
அதன் பல பரிமாணங்களைச் சொல்வதாக அமைந்திருக்கின்றன. இவரது கவிதைகளில் இது
பொதுவாகக் காணக்கிடைப்பது. இதைத்தாண்டி உணர்வுக்கு முழுக்க தன்னை ஒப்புவித்தும்
சில கவிதைகள் புனைந்திருக்கிறார். சில கவிதைகள் வெறும் வார்த்தை விளையாடலாக
நிற்கின்றன. இத்தகைய கவிதைகளில் அவரிடம் வழக்கமாய் நாம் காணும் அந்த உணர்வை, சம்பவத்தை நுணுக்கி ஆராயும் மனம்
தென்படுவதில்லை. உதாரணத்திற்கு அதீதத்தின் ருசி தொகுதியில் இருக்கும்
வாழ்க்கைப்பாதை (பக்கம் 36),
சம்மதம் என்று
சொல் (பக்கம் 66).
நாம்
இந்தக்கட்டுரையில் நவீன கவிஞர்கள் மேல் வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டில்
இதுவும் ஒன்று. கவித்துவம் கைகூடவில்லை என்று தெரிந்தும் எப்படி இத்தகைய கவிதையைத்
துணிந்து தொகுப்பில் கொண்டு வருகிறார்கள்? தான் எழுதுவதையெல்லாம் வாசகர்கள் இரசிப்பார்கள் என்ற எண்ணமா? எதற்கு இந்தப் பக்கம் நிரப்பும் செயல்? அவ்வாறே சமகால கவிஞர்களிடம் குறிப்பிட்டுச்
சொல்லும்படியான இன்னொரு குணம் அவர்கள் எந்தளவு உலகத்தோடு ஒட்டமுடியாத, பைத்தியக்காரத்தனம் நிரம்பி இருக்கிறார்கள்
என்று கவிதை வரிகளில் (பொதுவாக இறுதி வாக்கியங்களில்) சொல்லிச் செல்லும் பாங்கு
இருக்கிறது. உதாரணத்திற்கு இந்தத் தொகுப்பில் உளள பிசாசுக்கவிதை - 1 (பக்கம் 107). இந்தக்கவிதை காதலியுடன் தங்கியிருந்தவன் அவள்
சென்றபின்பு அறையைக் கவனிப்பதாக அமைந்திருக்கிறது. அறையில் அவள் விட்டுச்சென்ற
மயிர்ச்சுருள் வலையாக மாறி அவனை இறுக்குகிறது. இந்தக் கவிதையின் இறுதி வரிகள்
இப்படி முடிகின்றன. "வெளியேறுகையில் விடுதி மேலாளரிடம், 'எனக்குப் பின் இந்த அறையைப் பதிவு
செய்திருப்பது யார்?'
என்று கேட்டபோது
அவன் என்னை விநோதமாக உற்று நோக்கினான்."
இது அறிவுசீவிக்
கவிஞர்களிடம் நாம் சாதாரணமாகக் காணும் ஒரு குணாம்சம். தான் எத்தனை ஆழமான
சிந்தனையாளன் தெரியுமா,
உணர்வின்
பிறப்பிடத்துக்கே சென்றுவர என்னால் முடியும் என்ற எக்களிப்பு. ஆனால் பெரும்பாலான
கவிதைகளில் இப்படி உறுத்திக்கொண்டு இவை தெரிவதில்லை. கவிதையின் எழுதுகோலாகவே அவை
அமைந்துவிடுகின்றன. வரிக்கு வரி 'ஆஹா எத்தனை
அருமையான விவரிப்பு/விளக்கம்' என்று சிலாகிக்க வைப்பவை. இந்தக்கட்டுரையில் ஒரு உதாரணமாகத்தான்
மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனவே தவிர இங்கே நாம்
முன்வைக்கும் விமர்சனங்கள் எல்லாக்கவிஞர்களுக்கும் பொதுவானவையே. பக்கம் 36-ல் உள்ள வாழ்க்கைப் பாதை என்ற கவிதையைப்
பார்ப்போம்.
இந்த 33 வயதில்
எவ்வளவோ
கற்றுக்கொண்டாகிவிட்டது
கற்றுக் கொண்டதை
பரிசோதித்தாகிவிட்டது
எதையும்
கற்றுக்கொள்வது வீண் என்பதை
புதிதாய் இனி
எதையும் கற்கமுடியாது என்பதை புரிந்துகொண்டாகிவிட்டது
இந்த 44 வயதில்
எவ்வளவோ
கொடுத்தாகிவிட்டது
அடிபணிந்தாகிவிட்டது
வேசைத்தனம்
செய்தாயிற்று
கூட்டிக்
கொடுப்பவர்களுக்கு துணையிருந்தாகிவிட்டது
இந்த 55 வயதில்
எவ்வளவோ
காட்டிக் கொடுத்தாகிவிட்டது
கைவிட்டாகிவிட்டது
கோழைத்தனத்தை
வாழ்ந்தாகிவிட்டது
அதன்
வெகுமதிகளைப் பெற்றாகிவிட்டது
இந்த 66 வயதில்
எவ்வளவோ
குடித்தாயிற்று,
புகைத்தாயிற்று
புணர்ந்தாயிற்று
நம் அற்பக்
கடமைகளை நிறைவேற்றியாகிவிட்டது
நம் அற்ப
வெற்றிகளை அலங்கரித்தாயிற்று
நம்
அற்பத்தோல்விகளுக்கு அழுதாயிற்று
இந்த 77 வயதில்
எவ்வளவோ
காத்திருந்தாகிவிட்டது
காத்திருந்தாகிவிட்டது
காத்திருந்தாகிவிட்டது
காத்திருந்தாகிவிட்டது
கொலை வாளினை
எடடா!
இந்தக்கவிதை
எதையோ சொல்லவந்து எதுவும் சொல்லத்தோன்றாமல் ஓய் என்று ஒரு அதட்டுப் போடுவதுபோல
முடிந்திருக்கிறது. அதைமீறி இவ்வரிகளுக்கு ஒரு அர்த்தத்தைப் புனைந்து
பார்த்தால்கூட இது வெகு சாதாரணமான கவிதையாக நிற்கிறது. நேர்த்தியாக வரிகள்
கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. வடிவம் சரியாகப் பொருந்தியதனாலேயே பத்தோடு பதினொன்றாக
கவிஞர் இதைத் தொகுப்பில் இணைத்திருக்கிறார் என்றே சந்தேகம் வருகிறது.
இந்தத்தொகுப்பில் உள்ள கவிதைகள் 2009-ஆம் ஆண்டில் எழுதப்பட்டவை. அப்போது எழுதியதற்கும் இவர் சமீபகாலத்தில் எழுதிய
கவிதைகளுக்கு வடிவ வேற்றுமை என்று பெரிதாய் ஒன்றும் இல்லை. அதேவிதமான பாணி. அதே
அறிவுசீவி. அதே விளக்கங்கள். உணர்வுகளை வரிவரியாய் விளக்கிக் கொண்டே இருக்கின்றன.
அடுத்தததாக இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கவிஞரைப் பற்றிப் பார்ப்போம்.
கலாப்ரியா. இவரது வனம் புகுதல் என்ற தொகுப்பைப் பற்றிப் பேசுவோம். இதற்கு முன்னுரை
கவிஞர் சுகுமாரன் எழுதியிருக்கிறார். எண்பதுகளுக்குப் பின் எழுதப்பட்ட, படும் கவிதைகள் எல்லாமே பின் நவீனத்துவக்
கவிதைகள்தான் என்று ஒரே போடாகப் போடுகிறார். அதற்கு இவரே ஒரு வியாக்கியானமும்
கண்டுபிடிக்கிறார். அவர் சொல்வது "பின்நவீனத்துவக்கவிதை அகம்-புறம் என்ற
வேறுபாடுகளைத் தவிர்த்தது. பொதுவான படிமங்களுக்குப் பதில் சொந்த மரபிலிருந்து
உருவாக்கப்பட்ட படிமங்களும் குறிப்பீடுகளும் முன்னிலைப்படுத்தப்பட்டன. எழுத்து
நடையில் கட்டமைக்கப்பட்ட மொழி நடைக்கு மாற்றாகப் பேச்சு மொழியும், தொனி வழக்குகளுமாக விரிவடைந்தது...".
இதுபற்றி மேலும் இங்கு விளக்க விரும்பவில்லை. அது நம் பேசுபொருளை மீறிச் செல்வது.
கலாப்ரியாவின் கவிதைகள் பின்மதியப்பொழுதில் மென்மையாய் வந்து தழுவாமல்
தழுவிச்செல்லும் தென்றலைப் போன்றது. இவரது கவிதைகளில் தான் வசிக்கும் இடம்சார்ந்த
காட்சிகளை துல்லியமாக விவரிக்கிறார். அப்படி விவரிக்கையிலேயே அவற்றின்மேல்
மென்மையான தன்மையை அதன்மேல் ஏற்றிவைக்கிறார். உதாரணத்திற்கு இனப்பெருக்கம் (பக்க
எண்: 42)
என்ற கவிதை
வரிகள் இப்படி ஆரம்பிக்கின்றன:
"நெடுவழியின் தனிமை முடிந்து
ஊர்தொடங்குமிடத்தில் நீளக்குடில் போல் பண்ணை
கழிவிரக்கமெனப்
பொழியும் வெளிச்சத்தினிடையே பிராய்லர் கோழிகள் ஓயாது தீனி கொத்திக்கொண்டு.
பயம்
தொற்றியிருக்கும் ஒற்றையடிப் பாதையொன்று விலக்கி அழைத்துச்செல்லும் வழிபோனால்
வரும் இசக்கி கோவில்..."
நெடுவழியின்
தனிமை,
நீளக்குடில், கழிவிரக்கமென, பயம் தொற்றியிருக்கும் போன்ற வார்த்தைகள் மிகக் கச்சிதமாக அதன் தன்மையை அல்லது
கவிஞர் சொல்லநினைக்கும் விதத்தோடு பொருந்திவிடுகின்றன. அப்படியே விவரித்து வந்து
மனவோட்டத்துடன்,
கவிதை பேசும்
பொருளுடன் கலந்து கடைசி வரியில் முத்தாய்ப்பாய் முடிகிறது. அது பெரும்பாலும்
ஒற்றைத்தந்தியை மீட்டுவதுபோலவோ, குளத்தில் முதலில் எரிந்த ஒற்றைக்கல்போலவோ, ஒரு சின்ன புன்முறுவல்போலவோ அமைந்துவிடுகின்றன.
இந்தத்தொகுப்பில் பக்கம் 40-ல் தெரு விளக்கு என்றொரு கவிதை. பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருக்கையில்
நின்றுவிடும் மின்சாரம் கொண்டுவரும் இருட்டைச் சொல்கிறது. மின்சாரம் வந்தவுடன்
குதூகலிக்கும் பிள்ளைகளின் சந்தோஷம். இறுதிவரி இந்தக்கவிதையை சாதாரணமாக்கி
விடுகிறது. ('ஜாடைகளற்ற சந்தோஷ மொழிவழியே எந்த மாநிலத்தைப்
பிரிக்கப்போகிறார்')
இதற்கு அடுத்த
பக்கத்தில் 'வீதி விளக்குகள்' என்றொரு கவிதை.
"அருகே வரும்வரை பின்னாலிருந்தது
தாண்டும்போது
காலடியில்
தள்ளிப்போக
தள்ளிப்போக பூதாகரமாய் முன்னால் விரிகிறது
வெறுங்கையுடன்
வீடு திரும்புபவனின் நிழல்.
திடீரென
அணைந்தபோது கள்ளன் போலீசோ கல்லா மண்ணாவோ
சட்டென
விளையாட்டை நிறுத்திவிட்டு
ஒன்றுக்கொன்று
பயமுறுத்தி தடைப்பட்ட மின்சாரம்
பளீரென மீளும்போது
தனிச்சையாய்க் கைதட்டி
கூக்குரல்
எழுப்பும் குழந்தைகளின் ஜாடைகளற்ற சந்தோஷ வெளிச்சம்
காணாமலாக்கும்
கவலையின் நிழலை.
இந்தக்கவிதையில்
முதல்பத்தியை மட்டும் தனிக்கவிதையாகப் பிரித்தால் உலகத்தரமாய் நிற்கும். இரண்டாவது
அதில் நிறையச் சாத்தியங்கள் இருக்கின்றன. 'வெறுங்கையுடன் வீடு திரும்புபவனின் நிழல்' என்ற வரி ஒரு தோல்வியை,
இயலாமையை, அந்த தூரத்தைக் கடப்பதில் உள்ள தயக்கத்தை, வீட்டின் எதிர்பார்ப்பை என்று பல வடிவங்களில்
அர்த்தம் காணலாம். இதன் இரண்டாவது பத்தியைக் கவிஞர் வலிந்து தேர்வு செய்கிறார்.
அது இப்படி உருவத்தை சிருஷ்டிக்கும் மின்சாரம் போய் வந்த கணத்தில் மகிழும்
குழந்தைகளின் மகிழ்ச்சி தற்காலிகமாக கவலையை மறக்கச் செய்வது பற்றிச் சொல்கிறது.
அதைக்கூட விட்டுவிடலாம். ஏனெனில் அது கவிஞரின் தேர்வு. அதுவும் இங்கு சரியாகவே
பொருந்துகிறது. 40-ம் பக்கத்தில் இருக்கும் கவிதையின் 90% வார்த்தைகளை எடுத்து 41ம் பக்கத்தில் இருக்கும் கவிதையில் திணிப்பது
எந்த விதத்தில் நியாயம்?
ஏன் கவிஞர்கள் வாசிப்பவர்மேல் அசட்டையாக இருக்கிறார்கள். கவிதைகளைப் பற்றி
பொதுவாக நுணுக்கமான விமர்சனங்களை யாரும் வைப்பதில்லை என்பதினாலா இல்லை அகம்
சார்ந்த விஷயங்கள் என்பதால் ஏற்படும் பொருள் மயக்கத்தைத் தனக்கு சாதகமாக எடுத்துக்
கொள்கிறார்களா?
வாசகனுக்கு
நேர்மையாக கவிஞர்கள் நடந்துகொள்ளவேண்டும். கவிதைகள் குறித்து அதிகளவில்
பேசப்படவேண்டும்.
Comments
Post a Comment