லைக்கியல்

10/8/2016ல் எழுதியது. இதில் இன்னும் நிறைய எழுத ஆசையிருந்தது. எதற்கு வெட்டிவேலை, அந்தத் துறை சார்ந்த நபர்கள் செய்யட்டும், நமக்கு வேறு வேலையிருக்கிறது என்று விட்டுவிட்டேன்.

லைக்கியல் 
ஆச்சரியமாக இருக்கிறது. உலக மக்கள்தொகை (710 கோடி). 2016-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புப்படி சமூக வலைத்தளங்களில் உள்ள கணக்குகளின் எண்ணிக்கை 317 கோடியாம். இதில் 2016ல் மட்டும் 17.5 கோடிபேர் புதிதாய் கணக்கு தொடங்கியிருக்கிறார்கள். இத்தனைபேர் கூட்டமாகச் சேர்ந்து என்ன செய்கிறோம்? இதன் அவசியம் என்ன? உலகின் பாதி அன்றாடம் இதில் உலவிக்கொண்டிருக்கையில் இதுபற்றி பேசவேண்டியது அவசியமாகிறது.

முன்னர் பெருங்கதையாடல்கள் இருந்தன. முன்னுதாரணத்தலைவர்கள் இருந்தார்கள். அவர்களைப் பற்றி எல்லாமே பேசப்பட்டுவிட்டன. சாமானியனின் அகம் தான் தான் என்று குதித்துக்கொண்டிருக்கிறது. இது சாமானியரின் காலம். இதுவே சொல்லப்படாத கதையாக நிரப்பப்படாமல் இருக்கிறது. இலக்கியங்கள் சாமானியனைப் பற்றிப் பேச ஆரம்பித்து பல காலமாயிற்று. ஒவ்வொரு சாமானியனுக்கும் ஒரு கதையிருக்கிறது. சொல்ல விசயமிருக்கிறது. தன் குரல் கேட்கப்படவேண்டுமென்று நினைக்கிறான். அவனுக்கான எளிய வெளியாக சமூக வலைத்தளங்கள் உள்ளன.
எல்லோரும் அன்புக்காக ஏங்குறார்கள் என்பது எத்தனை உண்மையோ அதேயளவு உண்மை எல்லோரும் அங்கீகாரத்திற்காக ஏங்குகிறார்கள் என்பதும். மாஸ்லோ கோட்பாட்டின்படி உடற்தேவைகள், பாதுகாப்பு, காதல்-காமம் இவற்றில் தன்னிறைவடைந்தபின் தானாகவே மனிதனின் மனம் சமூக அந்தஸ்தை நோக்கித் திரும்பும் என்கிறார். எனவே உலகமயமாகிப்போன, நுகர்வு பெருகிப்போன இக்காலத்தில் சமூக வலைத்தளங்கள் இத்தனை பிரபலமடைந்திருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

முகநூல்:
ட்விட்டரை விட முகநூலில் கணக்குகள் குறைவுதான். 159 கோடி. 2015ல் முகநூலின் நிகர இலாபம் 369 கோடி. இந்த விபரங்களெல்லாம் நமக்குத் தேவையில்லைதான். ஆனால் இப்படி ஹாயாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோமே, இந்த இடம் தனியாருக்குரியது. நமக்குப் பின்னே, நம்மை வைத்து மிகப்பெரிய வணிகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. 
இணையம் என்பதன் நோக்கமே செய்தித் தொடர்புதான். எனவே சமூக வலைத்தளங்களின் உருவாக்கத்தில் புதுமையொன்றும் இல்லை. முதலில் யாகூ, எம்மெசென் போன்றவை சாட் அறைகளையும் குழுக்களையும் உருவாக்கின. பின்னர் பிளாக் வந்த்து. இதிம் மை ஸ்பேஸ் பிரபலம். அடுத்த்தாக சமூக வலைத்தளங்கள். 
இந்த மெய்நிகர் உலகம் சமூக அடுக்கையே மாற்றிப்போடுகிறது. பேசுவதைக் கேட்க நாதியேயில்லை என்பவர்கூட முகநூலில் ஐந்தாயிரம் பேர்களுடன் நட்பாக முடியும். தனது குரலை கவனிக்கச் செய்ய முடியும். இது ஒருவரது ஈகோவைத் திருப்திபடுத்துகிறது. விதவிதமாய் அலங்கரித்து உலகத்துக்கு ஒருவர் தன்னை எப்படிக் காட்ட வேண்டுமென்று நினைக்கிறாரோ அப்படிக் காட்டலாம். மாயவலையில் தெரியும் மாயபிம்பம்.

லைக்கின் முகமதிப்பு என்ன?
ஒருவர் ஒரு பதிவுக்கு லைக்கிடுகிறார் என்றால் அதன் அர்த்தம் பல வகைப்படும். 
1) படித்துவிட்டேன்
2) படிக்கவில்லை. ஆனால் உன் நட்பும் ஆதரவும் எனக்குத் தேவை
3) படித்தேன். பிடித்திருக்கிறது
4) அரிதாகப் பதிவிடுகிறார். லைக்கி வைப்போம்
5) தொடர்ந்து நம் பதிவுக்கு லைக்குகிறார். நன்றிக்கடன் செலுத்துவோம்
6) என்னுடைய பதிவுக்கு இவர் லைக்கிட வேண்டும். எனவே லைக்குகிறேன்.
7) இவர் பெரிய புள்ளி. இவருக்கு நெருக்கமாய் இருக்க வேண்டும்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். குறைந்தபட்சம் ஒரு லைக்கை வைத்து ஒருவர் பதிவை வாசித்துவிட்டார் என்றுகூடச் சொல்லிவிட முடியாது. ஆனால் இது ஒரு வெறியாகவே மாறியிருக்கிறது. இதில் ஒரு நுண்ணரசியலும் இருக்கிறது. 

லைக் வெறியும் நுண்ணரசியலும்:
இங்கே ஒவ்வொருவரும் தனது அடையாளத்தை உருவாக்க, மெருகேற்ற வருகிறார். தனக்கான வட்டத்தை கவனமாக உருவாக்குகிறார். வட்டம் என்பதே ஒரு அரசியல்தான். ஒருவகை கொடுக்கல் வாங்கல். ஒரு பதிவு என்பது கவனக்கோரலை வேண்டிநிற்கிறது. இங்கே விவாத்த்துக்கு இடமில்லை. லைக் போடவேண்டும். பின்னூட்டமிட வேண்டும். தொடர்ந்து சமூக இணையவெளியில் இருக்கும் ஒருவருக்கு இது ஒருவகை இருத்தல் பிரச்சினையாகி விடுகிறது. வாழும் உலகைவிட இந்த வெளியில் இருப்பதையே அவர் ‘தானாக’க் கருத ஆரம்பிக்கிறார். ஏனென்றால், இங்குதான் அவரது தனித்தன்மை வெளிப்படுகிறது. தான் ஆசைப்பட்ட வித்த்தில் உலகத்துக்கு அவரைக் காட்டிக்கொள்ள முடிகிறது. வலைத்தளத்தில் ஒன்று ஒருவரின் ஈகோ திருப்தியடைந்து ஒருவித தற்காலிக நிறைவை அடையலாம் அல்லது எதையோ பரிகொடுத்தவர் போல உலகமே தன்னை மறந்து கைவிட்டுவிட்ட்து போன்ற கையறு நிலைக்கும் ஆளாகலாம். எல்லாமே தற்காலிகம் தான். உதாரணத்திற்கு ஒரு நல்ல பதிவை ஒருவர் போடுகிறார் என்றால் அதற்கு தொடர்ந்து லைக்கும் பின்னூட்டமும் வரவர அவரது ஈகோ திருப்தியடைகிறது. ஆனால் மறுநாள் அது முடிந்துபோன விசயமாகிவிடுகிறது. நேற்று இருந்த அடையாளத்தைத் தொடர அவர் விரும்புகிறார். வலிந்து யோசித்து புதிதாக ஒன்றைச் சொல்கிறார். அந்த மெனக்கிடலே அதை சாதாரணமானதாக அத்தனை விரும்பக்கூடிய ஒன்றாக இல்லாமல் ஆக்கி விடுகிறது. பின் மனச்சோர்வு வருகிறது. எப்படி இலாட்டரியில் பரிசு விழாவிட்டாலும் தொடர்ந்து ஒருவர் பந்தயம் வைக்கிறாரோ அதுபோலத் தொடர்கிறார். இவ்வாறாக தனக்கென ஒரு நெருங்கிய வட்டத்தையும், அடையாளத்தையும் உருவாக்கிக்கொள்ளும் வரை தொடர்கிறார்.

குட்மார்னிங், குட்நைட் போடும் பெண் பதிவர்கள் பற்றி நாம் எதுவும் பேசவேண்டியதில்லை. செய்திகளையும், சிந்தனைகளையும் வெளியிடுபவர்களின் நோக்கம் பற்றித்தான் பேசுகிறோம். வட்டம் என்பதே ஒரு அரசியல் என்றோமில்லையா, ஒரு வட்டம் உருவானபின் வட்ட்த்தில் இருப்போருக்கேற்றவாறு சிலர் தன்னை மாற்றிக் கொள்கிறார்கள். சிலர் மாற இயலாவிட்டாலும் நண்பர்களுக்குத் தவறாமல் லைக் போட்டுவிடுகிறார்கள். அவரது பதிவு குறித்து எவ்வித விமர்சனமும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். அப்படியான நபர்களை வட்ட்த்திலிருந்து விலக்குகிறார். இல்லாவிடில் உள்பெட்டியில் வந்து தனியே உரையாடுகிறார். இங்கு யாரும் அறிவுரை கேட்க வரவில்லை. எதையாவது பிறருக்கு மேடையேறிச் சொல்லவே தயாராய் இருக்கிறார்கள். எனவே விமர்சனம் என்பது மேடையிலிருந்து இழுத்து கீழே தள்ளுவதுபோன்ற செயலாகவே பார்க்கப்படும்.

Comments

Popular posts from this blog

புதுமைப்பித்தன் படைப்புகள் – ஒரு மீள்பார்வை

தண்டியலங்காரம்: பொதுவியல்

தீப்பெட்டி