என்ன தவம் செய்தனை
முகநூலில் என்ன தவம் செய்தனை என்ற தலைப்பில் தொடர்ந்து அவ்வப்போது பதிவுகள் இட்டுவந்தேன். இது என் பிள்ளைகள் சித்தார்த்தா, கவிதாயினியுடனான வாசம் மிக்க நினைவுகள்.
கவிதாயினி மத்தியானம் ஐஸ்க்ரீம்
கடையைப் பார்த்துட்டு ஐஸ் வேணும்னு ஒரே அடம். டேய் வேணாம் உனக்கு
சளிபிடிச்சிருக்குன்னா, நாந்தான்
காலைல மருந்து குடிச்சேன்ல அப்படின்றா. சளி சரியாகட்டும் வாங்கித்தர்றேன்னேன்.
கொஞ்சநேரம் பேசாம இருந்தா. பிறகு, 'நான் இன்னொருக்க மருந்து குடிக்கட்டா' அப்படிங்கா.
சித்தார்த்தாவுக்கு ஒரு அசைன்மென்ட்.
நோட்டில் அவனுக்குத் தெரிந்த 4 இலைகளை ஒட்டி பெயர் எழுதவேண்டும். 1ம்
வகுப்பு. இலை பறித்து பெயரை ஒரு தாளில் எழுதித்தந்துவிட்டு போன்
பேசிக்கொண்டிருந்தேன். இலையின் முன்புறம்போய் பசையை தடவிக்கொண்டிருந்தான் ஒவ்வொரு
இலைக்கும். அடிக்கவில்லை, தட்டவில்லை.
பிடரியில் தொட்டுத்தான் சொன்னேன். பின்பக்கமாய் தடவு அப்போதுதான் முன்புறம் இலை
தெரியும்னு. சாயங்காலம் வரைக்கும் பேசலை. டீச்சர் 'good work' ன்னு
நோட்டில் போட்டுருக்காங்க. அவங்கம்மா எனக்கு தாங்க்ஸ் சொல்லச்சொன்னா சொல்றான், 'அப்பா
எங்கிட்டே ஒரு சாரி, 2 தாங்க்ஸ்
சொன்னா, நான்
ஒரு தாங்க்ஸ் சொல்றேன்'
விலங்குகளுக்கெல்லாம் கருக்கலைதல்
நடந்திருக்கிறதா? எனக்குத்
தெரியவில்லை. அவை எப்போதும்போல் தான் ஓடவும், உணவுதேடவும் செய்கின்றன. பெண்களுக்கு
மட்டும் ஏன் அடிக்கடி இது நேர்கிறது? அதிலும் முதல் கரு. என் மனைவிக்கு கரு
உருவான 10வது
நாளே ectopic (ஃபெலோபியன்
டியூபில் கரு வளர்தல்) என்று கண்டுபிடித்தனர். உடனே ஆபரேசன் செய்யாவிட்டால் ஆபத்து
என்றுி அந்தக் கரு கலைந்தது. அடுத்து மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு
கரு உருவாகி நான்குமாதங்கள் தங்கியது இதயத்துடிப்பு பலஹீனமடைந்து கடைசியில் நின்றுபோனது. அதற்கொருமுறை டிஎன்சி
செய்தோம். என்மனைவி வெறுத்துப்போனாள். சென்னையில் தனிக்குடித்தனத்தில் நாங்கள்
இருவர் மட்டுமான அந்தக் காலகட்டம் வலி மிகுந்தது. அதிலும் அவளுக்கு, நான் வேலைக்குச் சென்றபிறகு பைத்தியம் பிடிக்காத குறைதான்.
மொத்தத்தில் திருமணமாகி ஒரு வருடம் கழித்து மூன்றாவது கருவாக சித்தார்த்தா
வந்தான். ஆணுக்கும் பெண்ணுக்கும் முதல்முதலில் கருவின் மென்மையான தன்மைபற்றித்
தெரிவதில்லை. இன்றைய வாழ்க்கை முறை மாறிவிட்டதால், நாம் கடினஉழைப்பிலிருந்து விலகிவிட்டதாலும், முதல் மூன்று மாதங்கள் மிகவும், கவனமாய் இருக்கவேண்டியது அவசியம். கடினவேலைகள் செய்யக்கூடாது, மாடி ஏறுவதைத் தவிர்க்கவேண்டும். ஆட்டோ, பைக், பஸ் போன்றவற்றில் முடிந்தவரை பிரயாணம் செய்யக்கூடாது இப்படி பல.
சித்தார்த்தா அவன் தாயின் வயிற்றில்
இருக்கும்வரை நான் ஒருபோதும் என்னை ஒரு தந்தையாய் உணர்ந்ததே இல்லை. உள்ளிருந்த
அவனை வெறுமனே வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தேன். சிசேரியன் தான். என்
மனைவிக்கும் மாமியாருக்கும் பெண் வேண்டும் என்று ஆசை. எனக்கு பையன். பிறந்தது
பையன் என்றதும் மாமியார் முகத்தில் அப்படி ஒரு சோகம். முதல்முதலாய் ஆப்பிள் பழம்
போல நர்ஸ் குழந்தையைக் கையில் எடுத்து வரும்போது, அந்தக் கணத்தில் கடவுள் என் உயிரைக்
கேட்டிருந்தாலும் தந்திருப்பேன். அப்போதுதான் தான் தகப்பனானேன். வீல் வீல் என்று
அவன் கதறி அழுதுகொண்டிருந்தான். நான் அருவிக்கடியில் நிற்பதுபோலிருந்தேன்.
என் நண்பர் ஒரு மெடிக்கல் ரெப். அவர்
நகைச்சுவையாகச் சொல்வார், குழந்தை
மருத்துவர் உண்மையில் மருத்துவம் பார்ப்பது குழந்தையின் அம்மாவுக்குத் தான். சளி, காய்ச்சல், வயிற்றுவலி
என்பது முதல் இரு வருடங்களில் அடிக்கடி வருவதுதான். இங்கே மிகப்பெரிய வியாபாரம்
குழந்தைகளை வைத்து நடைபெறுகிறது. நம் விளம்பரங்களைப் பார்த்தாலே தெரியும்.
பெரும்பாலானவை பெண்களை நம்பியே உள்ளன. விளம்பரங்கள் குறித்து அவர்களுக்கு பெரிதாய்
கேள்விகள் ஏதும் இல்லை.
சித்தார்த்தா பிறந்து ஆறுமாதங்கள் ஆகியிருந்தது. காலையில் ஆய்க்குப் போகும்போது இரத்தம் வந்தது
என்று டாக்டரிடம் போனோம். அவர் இன்ஃபெக்ஷன் என்று மருந்து கொடுத்தார். சாயங்காலம்
நாம் ஆஃபீஸில் இருக்கும்போது மனைவி போன் செய்து இரத்தப்போக்கு நிற்கவில்லை
என்றாள். மருந்து கொடுக்கச் சொன்னேன். எனக்கு இராத்திரி ஷிஃப்ட். இரவு 11 மணிக்கு வெறும் இரத்தமாக வருகிறது என்று பயப்பட்டாள். நான் லீவு
சொல்லிவிட்டு கிளம்பினேன். பையன் துவண்டுபோன கீரையாய்க் கிடந்தான். எதுவுமே
சாப்பிடவில்லை. வாந்தி. கீழே அரைமணிக்கொருமுறை இரத்தம் வெளியேறியது. என அம்மாவின்
சேலை முழுக்க இரத்தம். அவர் மடியில் வைத்துத் தாங்கியபடி. என்னசெய்யவென்றே
புரியவில்லை. நடுஇரவு. யாரும் தூங்கவில்லை. ஏன் அந்நேரம் மருத்துவனைக்குச் செல்லத்
தோன்றவில்லை என்று இன்றுவரை புரியவில்லை. 5 நிமிடங்களுக்கொருமுறை கதறினான், பின்புறம் இரத்தம் அப்படியே ஒழுகும். கழுத்து நிற்கவில்லை.
அய்யோ அய்யோ என்று அரற்றிக்கொண்டே இருந்தோம். காலையில் விடிந்ததும் வழக்கமாய்க்
காட்டும் டாக்டரிடம் தூக்கிக் கொண்டு ஓடினோம். அவர் பயந்துபோனார். இவ்வளவு நேரம்
ஏன் வெயிட் பண்ணினீங்க. பையனுக்கு அநேகமா சிறுகுடல் பெருங்குடலுக்கு உள்ள போயிருக்கும்.
உடனே எக்மோர் சைல்ட் டிரஸ்ட் ஆஸ்பத்திரி இல்லாட்டி அரசாஸ்பத்திரி போங்கன்னு
சொன்னார். பிள்ளையைக் கையில் வைத்தபடி ரோட்டில் நின்று கதறிக்கொண்டிருந்தோம்.
நேராய் சைல்ட் டிரஸ்ட் ஐசியு. டாக்டர் நமச்சிவாயம் என்ற சர்ஜன். எங்களுக்கு
விளக்கினார். 'பெருங்குடல்
ப- வை தலைகீழாகக் கவிழ்த்தது போலிருக்கும். அதன் உள்பகுதி முழுதும் சிறுகுடலால்
நிரம்பியிருக்கும். ப வின் பாதியளவுக்கு சிறுகுடல் உள்ளே போய்விட்டது. ஆசனவாயில்
காற்றை உள்ளேதள்ளி அதை வெளியே கொண்டுவரப் பார்ப்போம். நிறைய புண் உண்டாகும்.
சிறுகுடலை கொஞ்சம் வெட்டவேண்டி வரலாம். இது முடியாவிட்டால் ஆபரேஷன்."
சரியென்றோம். பச்சைப் பிள்ளை. அப்படியே துடித்துவிட்டான். நான் அவன் தலைமாட்டில்
இருந்து கைகளைத் திமிறாதபடி மேலே பிடித்திருக்கிறேன். கீழே ஒருவர் கால்களைப்
பிடித்தபடி. என்னால் முடியவில்லை. வேறொருவரை பிடிக்கச் சொல்லிவிட்டு வெளியே வந்து
அழுதேன். சிறுகுடல் வெளியேறவில்லை. ஆபரேஷன். கிட்டத்தட்ட 4 மணிநேரம். நல்லபடியாய் முடிந்தது. உடம்பெல்லாம் வயர்களுடன் 5 நாட்கள் ஸ்பெஷல் வார்டில் இருந்தான். அப்புறம் அவன் முகத்தில்
சிரிப்பைப் பார்த்தோம்.
This is how girls win the war:
இது நடந்து ஆறுமாதங்கள் இருக்கும். இந்தக்காட்சியை மனைவி வீடியோ
எடுத்து வைத்திருந்தாள். துரதிர்ஷ்டவசமாக அழிந்துவிட்டது. வீட்டில் சித்தார்த்தா
உட்கார்ந்து எழுத ஒரு டெஸ்க் வாங்கித் தந்தோம். அப்புறம் ஒரு குட்டி ஸ்டீல் சேர்.
பார்க்க அழகாய் இருக்கும், வானீல
வண்ணத்தில். ஒருநாள் அம்மா மடியில் படுத்து இராகம்போட்டு கவிதாயினி அழுது
கொண்டிருந்தாள். அவளுக்கு அந்தச் சேரும் டெஸ்கும் வேண்டுமாம். கொஞ்சநேரம் அழுவாள், அப்புறம்
சித்தார்தாவைக் கிள்ளுவாள். அவன் சப்புன்னு ஒரு அறை
வைப்பான். அம்மா மடியில் கிடந்து அழுவாள். இப்படித் தொடர்ந்தது. அம்மாக்காரி, குழந்தைக்குத் தடவிக்கொடுத்து, 'சேரிம்மா, அழாத, நல்ல புள்ளையில்ல' அப்படிங்கிறாள். அப்புறம் அவள் அழுகை அதிகமாகவும், சித்தார்த்தாவுக்கும் அழுகை வந்துவிட்டது (பாசக்காரப்பயலா
இருந்தாலும், அம்மா
தங்கச்சியை மட்டும் கொஞ்சறது பயலுக்குப் பிடிக்காது) அவனும் அம்மா மடியில் படுத்து
அழ ஆரம்பித்தான். வீடியோ சித்தார்த்தா அழுவதை மட்டும் க்ளோசப்பில் காட்ட நாம்
நெஞ்சம் நெகிழ்ந்து கிடக்க வீடியோ ஜூம் ஆகும் பாருங்கள், அங்கே கவிதாயினி ஜம்முனு சேரில் அமர்ந்து டெஸ்கில் கால் போட்டு
உட்கார்ந்திருக்கிறாள்.
எனக்குச் சாப்பிடும்போது யாரும்
தொந்தரவு செய்வது பிடிக்காது. சித்தார்த்தா அப்போத்தான் முதுகு மேல சறுக்கு
விளையாடுவான். பின்னாலிருந்து கழுத்தைக் கட்டிக்கொண்டு தொங்குவான். வீட்டுக்காரி
பாத்துப்பாத்து ஏதாவது தட்டில் போட்டுக்கொண்டிருப்பாள்.
நேற்று இரவுணவு சுடுசோற்றுக்கு தட்டாம்பயித்துக் குழம்பும்
அப்பளமும். கவிதாயினி சோற்றில் கைவைத்து பிசைந்து கொண்டிருந்தாள். குழம்புகரண்டி
எடுத்து 'அப்பா
முருங்கா சாப்பிடு, கத்திக்கா
சாப்புடு' ன்னுட்டிருந்தாள்.
சும்மாரும்மான்னு சொல்லிட்டிருந்தேன். என்ன நினைத்தாளோ்.
தட்டில் சோறும் குழம்புமாகப் பிசைந்து 'அப்பா ஆ வாங்கிக்கோ' என்றாள். அப்பளத்தை கொஞ்சமாய் நொறுக்கி சோற்றோடு தனியே பிசைந்து
தந்தாள். இரண்டுவாய்க்கொருமுறை கத்தரிக்காயோ, தக்காளியோ, முருங்கையோ தனியே பிரித்துத் தந்தாள். எங்கெங்கோ போகிறது
சிந்தனை. அந்தச்சுவை எதில்தான் வரும். ஒருதட்டுச் சோறும் அவள் தான் ஊட்டிவிட்டாள்.
கவிதாயினிக்கு 2 வயசு.
என்னப் பெத்த அம்மேல்லியோ!
அப்போது சித்தார்த்தாவுக்கு 4 வயது.
நான்கு
வழிச்சாலையில், இருசக்கர வாகனத்தில்
அவனுடன் செல்கையில் நடந்த உரையாடல்:
அப்பா, நிலா நம்ம கூடவே
வருதுப்பா
ஆமம்மா, நிலாவுக்கு
இராத்திரிதான் பிடிக்கும், பகல் முழுக்கத்
தூங்கிட்டு இராத்திரி நம்மகூட பேசிட்டிருக்கும்.
எனக்கு ஒன்னுமே கேட்கலப்பா
அது, ரொம்ப தூரத்துல இருக்கா, அதான்
கேட்கலை.
நிலாவுக்கு ஃப்ரெண்ட்ஸ் கிடையாதாப்பா?
உண்டே, நிறைய நட்சத்திரங்கள், அப்புறம்
மேகம்.
(கொஞ்ச நேரம் கழித்து)
அப்பா, நிலா மழை பெஞ்சா என்ன
செய்யும்?
இன்று காலை 7 மணிக்கெல்லாம்
நானும் சித்தார்த்தாவும் அவன் அம்மாவையும் தங்கை கவிதாயினியையும் இரயிலேற்றி
அனுப்பினோம். மதுரையில் ஒரு திருமண வரவேற்புக்காக. இவன் வயதில் நான் என் அம்மா
ஊருக்குப் போன நாட்களெல்லாம் காய்ச்சலில் கிடந்து உழன்றிருக்கிறேன். இவன் ரொம்ப
சந்தோஷமாக வழியனுப்பி வைத்தான். வீட்டிற்கு வந்ததும் குளிப்பாட்டித்
துவட்டிவிட்டேன். நான் குளித்து விட்டு வரும்போது, இட்லியை அவனே எடுத்துவைத்துச்
சாப்பிட்டுக்கொண்டிருந்தான். பக்கத்தில் ஹாட்பாக்ஸ், தக்காளிச்சட்னி, என்னுடைய தட்டில் மூன்று இட்லியும் சட்னியும். அய்யோ அப்படியே
கட்டிக்கணும்னு தோணிச்சு. அவனுக்குப் பிடிக்காது. சாப்பிடும்போது 'அப்பா யாரோ கூப்ட மாதிரி இருந்ததுல்ல?' இல்லியேடா, 'இல்லப்பா, கவிதாயினி அண்ணான்னு கூப்பிடறமாதிரி இருந்தது' கொஞ்சநேரம் கழித்து, 'அப்பா, கவிதாயினி இப்ப பாட்டுப் பாடிட்டு இருக்கா' எப்படிடா சொல்றே, 'என் மனசுக்குத் தோணும். அம்மாவும் பாப்பாவும் எங்கயாவது நம்மள
விட்டுட்டு போனா எனக்கு அவ செய்றது எல்லாமே என் மனசுக்குத் தெரிஞ்சுடும்'. அவனை கட்டிக் கொண்டேன். 'அப்பா, என்னிக்காச்சும் நானும் அம்மாவும் வெளியூர் போனா பாப்பாவ
நீங்கதான் பாத்துக்கணும் சரியாப்பா?' வகுப்பில் என்ன நினைத்துக் கொண்டிருப்பான் என்றே யோசித்துக்
கொண்டிருக்கிறேன்.
சித்தார்த்தாவுக்கு ஒன்றரை
வயதிருக்கும்போதுதான் திருநெல்வேலிக்கு குடியேறினோம். அப்போது மாப்பிள்ளை திருமணத்திற்காக
வாழ்த்து அட்டை தேர்வு செய்ய ஒருகடைக்கு வந்திருந்தோம். கடையில் எல்லோரும்
மும்முரமாய் அட்டைகளைக் காண்பித்துக் கொண்டிருந்தபோது, சித்தார்த்தா
மேஜையிலிருந்து ஒரு தட்டை கீழே தள்ளிவிட்டான். அது பெருத்த சப்தத்துடன் விழ
எல்லோரும் அவனைத் திரும்பிப் பார்த்தனர். சிலநொடிகள் மௌனம். அப்போது அவன் சொன்னான்
"அப்பாதான் தள்ளி விட்டாங்க!"
இன்றைக்கு சித்தார்த்தாவுக்கு
விடுமுறை. 1ஆம்
வகுப்பு படிக்கிறான். சனிக்கிழமை அவன் பள்ளிக்கூடம் போவதே எனக்குப் பிடிக்கவில்லை.
ஏழரை மணிநேரம் தினமும் பள்ளியில் இருக்கிறான். வீட்டுக்கு வந்து ஒன்று அல்லது 2 மணிநேரம்
வீட்டுப்பாடம். இந்த இலட்சணத்தில் எதற்கு சனிக்கிழமையும் இதையே செய்யவேண்டும்.
அவனுக்கு மொட்டைபோடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தோம். முடியாது
என்று மறுத்துக் கொண்டிருந்தான். நான் சொன்னேன் 'ஒரு துணியெடுக்கப் போனால் கண்டிப்பாய்
உன்னிடம் அபிப்பிராயம் கேட்பேன் ஆனால் உனக்கு உடம்பு சரியில்லை ஊசி போடவா வேண்டாமா
என்று நான் தான் முடிவெடுப்பேன். உன்னிடம் கேட்டுக்கொண்டிருக்க மாட்டேன்.' அவன்
அம்மாவிடம் சொல்கிறான், 'அம்மா, அப்பாட்ட
வேணாம்னு சொல்லுங்கம்மா. அவருக்கு என்னால சொல்லிப் புரியவைக்க முடியாது'.
முதல் முதலில் எல்கேஜி யில்
சேர்த்துவிட்ட ஒருமாதத்தில் பையன் பாடம் எழுதிக்கொண்டே இப்படிச் சொன்னான் 'அம்மா, நான்
சங்கீதாவ லவ் பண்றேன்' ஒருதடவை
அம்மா முகத்தைப் பார்த்துவிட்டு 'அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்'. என்
அண்ணன் பையன் இப்படித்தான் 2 ஆம் வகுப்பில் படிக்கும்போது அவன்
ஸ்கூல் டீச்சர் அவரிடம் கம்ப்ளெயிண்ட் செய்தது 'உங்க பையன் ஒரு பிள்ளைட்ட லவ் பண்றேன்
சொல்றான் கண்டிச்சு வைங்க'. அவர்
அடி வெளுத்தெறிஞ்சிட்டார். நான் சொல்லி வச்சிட்டேன், 'மக்கா எதுவாயிருந்தாலும் நமக்குள்ள
பேசிக்குவம். அந்தப்பொண்ணு போய் டீச்சர்ட்ட சொல்லிட்டா அடி விழும் பாத்துக்க. ஆனா
அப்பா உன்னிய திட்டமாட்டேன்'. அப்புறம் இன்னிக்கு அவனுக்கு இரண்டு
வார்த்தைகள் கத்துக்குடுத்தேன் like & love.
சனிக்கிழமை வீட்டுக்குப்போய் கால்கை
கழுவக்கூட இல்லை. அதற்குள் மனைவியின் கூக்குரல் 'ஐயையோ எம்புள்ள'. டமார்னு
சத்தம். பாப்பா வீல்னு கத்துகிறாள். ஓடிப்போய்ப் பார்த்தால், டிவி
விழுந்து அவள் மேல் கிடக்கிறது. டிவி ஸ்டாண்ட் மீது ஏறியிருக்கிறாள் அப்படியே அவள்
மேலே சாய்ந்து விட்டது. நடுங்கிக்கொண்டே இருந்தாள். கண்ணுக்குப்பக்கம் அடி, வாயிலிருந்து
இரத்தம் கசிந்தது. அப்புறம் கொஞ்ச நேரத்தில் மூக்கிலிருந்து இரத்தம் ஒழுகவும்
பக்கத்திலிருந்த ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். டூட்டி டாக்டருக்கு ஒன்றும் தெரியவில்லை. இ என் டி ஸ்பெஷலிஸ்ட்
வரசொன்னார். அவர் வர ஒருமணிநேரம் ஆனது. வீட்டுக்காரிதான் ரொம்பப் பதறிக்
கொண்டிருந்தாள். மூக்கில் எலும்பு உடைந்திருந்தால் தொட்டால் வலிக்கும். அவர்
அமுக்கிப் பார்த்தார். இவள் பேசாமல் இருக்கவும், வலிக்கும் ஆன்டி பயாடிக் ஒன்றுக்குமாக சிரப் எழுதினார். மனைவி
மாறிமாறி கேட்கவும், 'எதுக்கும் ஸ்கேன் எடுத்துடலாம், மூளை, மூக்கு ரெண்டுக்கும் ஸ்கேன் நாளைக்கு எடுத்துட்டு வந்துடுங்க' என்றார். டூட்டி டாக்டருக்கு ரூ. 100. ஸ்பெஷலிஸ்டுக்கு ரூ. 300. வீட்டுக்கு வந்து பாப்பாவைத்தூக்கி வைத்துக் கொண்டிருந்தேன்.
சித்தார்த்தா அருகிலேயே உட்கார்ந்திருந்தான். ரொம்பநேரம் அவனைக் கவனிக்கவேயில்லை.
அழுதுவிடுவான் போலிருந்தான். அவனுக்கு பாப்பாவைத் தாங்கு தாங்கு என்று
தாங்கும்போதெல்லாம் இப்படித்தான். அவனையும் அணைத்துக் கொண்டேன். அவன் கண்ணீர் என்
நெஞ்சில் வழிந்தது. ஆறுமாதம் இருக்கையில் இவனை வைத்துக்கொண்டு நான் அலைந்தது
ஞாபகம் வந்து உடல் ஒருமுறை நடுங்கியது.
குழந்தைகள் மட்டுமே வளர்வதில், வயது
கூடுவதில் ஆர்வமாயிருக்கின்றனர். அதேநேரம் அவர்களுக்கு பால்யத்தை விட்டுத்தரவும்
மனது இருக்காது. சிலநேரம் 6 வயதான
என் மகன் தூக்கச்சொல்லுவான். எப்போது இரண்டாம் வகுப்பு போவோம் என்று நாட்களை
எண்ணிக்கொண்டிருக்கிறான். உனக்கு ஆறுவயது என்றால் சண்டைக்கு வருவான். நேற்று மகள்
நான் ஒரு வேலையாக இருக்கும்போது முதுகில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தாள்.
தற்செயலாய்த் திரும்பும்போது முழங்கை அவள் கன்னத்தில் இடித்துவிட்டது. அவள்
சத்தத்தையே காணோம். என்னவென்று பார்த்தால் சுவர்
முக்கில் முகம் சாய்த்து விசும்பியழுது கொண்டிருந்தாள். எங்கம்மே என்று தூக்கி
வைத்து அணைத்துக் கொண்டதும் அவளும் இறுக்கி அணைத்துக் கொண்டாள். இப்படி கொஞ்சநேரம்
போக கீழே படுத்துக்கிடந்த மகன் தலையணையில் முகம் புதைத்து கண்ணீர் விட்டுக்
கொண்டிருந்தான். அப்புறம் அவளை இறக்கிவிட்டு 6 வயதுப் பிள்ளையைத் தூக்கிவைத்துக் கொஞ்சினேன். அவன் கூச்சத்தோடு
நான் என்ன சின்னப்பிள்ளையா என்றான். எனக்கு எப்பவும் நீ குழந்தைதானடா என்றேன்.
நான் ஒரு பொக்கைவாய்க் கிழவனாகும்போது இவனைக் கொஞ்சப்போவதில்லை. இவன்
பிள்ளையைத்தான். காலம் ஒன்றும் அத்தனை கொடூரமானதல்ல. இருந்தும் துயரமாகத்தான் இருக்கிறது.
இந்தத் தொடர் சித்தார்த்தாவுக்காக எழுத நினைத்தேன்.
ஆனால் கவிதாயினி போட்டிக்கு வந்து நிற்கிறாள். என்ன செய்வது.
இரண்டு
நாட்களாக வீட்டிற்கு 10மணிக்குமேல் தான்
செல்கிறேன். வழக்கமாய் கவிதாயினி விழித்திருப்பாள். வந்தவுடன் கையைப் பிடித்து
இழுத்து மொட்டைமாடிக்குக் கூட்டிச் செல்வாள். அங்கே பேசாமல் அமர்ந்திருப்போம்.
இல்லை அவள் மடியில் படுத்துக்கொள்வாள் வானத்தைப் பார்த்தபடி. நிலா் தெரிந்தால்
விளையாடுவோம். இரண்டுநாட்களாக நான் வருமுன் அவள் தூங்கிவிட்டாள். அவளுக்கு தூங்கும் நேரம் மட்டும் அம்மாதான் அருகில் இருக்கவேண்டும்.
எனக்கு அவளை அழவைத்துப் பார்ப்பதில் அலாதிப் பிரியம். அவள் தலையணையை யாருக்கும்
தரமாட்டாள். மூத்திரம்பெய்ந்து வைக்கும் நீலநிற இரப்பர்ஷீட்டையும் இழுத்து
வைத்துக் கொள்வாள்.
இரண்டுபேரையும் பல்துலக்க வைத்து குளிப்பாட்டுவது
என்வேலை. நேற்று காலையில் அவளிடம் கா விட்டுவிட்டேன். அவள் முந்தியநாள் என்னுடன்
விளையாட வராததால். இன்று அவள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு குளிக்கவரமாட்டேன்
என்றாள். தூக்கிக்கொண்டுபோய் பாத்ரூமில் விட்டதும், தண்ணீரைப்
பார்த்தபின் விளையாட ஆரம்பித்தாள். நான் குளித்துவிட்டு வந்ததும் அவளை ஆசையாய் ஒரு
கிள்ளு கிள்ளிவைத்தேன். உடனே அவள் உதட்டைப் பிதுக்கியபடி கண்கள் கலங்க, 'அப்பா என்மேல கோபமா இருக்கீங்களா?' என்றதும் அப்படியே நெகிழ்ந்துவிட்டேன். 'இல்லடா குட்டி. அப்பா ஆசையா கிள்ளுனேன்.' என்று கொஞ்சநேரம் கொஞ்சியபிறகு பழம் விட்டுக்கொண்டோம்.
சித்தார்த்தாவுக்கு ஆறு மாதம்
இருக்கும்போது நடந்த மேஜர் அறுவைச்சிகிட்சைக்குப் பின் டாக்டர் சொன்னது எப்போதுமே
மருந்து கொடுக்கும்போது அவனுக்கு ஆன்டிபயாடிக் சேர்த்துக் கொடுங்கள். அவனுக்கு
எப்போது பார்த்தாலும் அடிக்கடி சளி பிடித்துக்கொள்ளும். ஒருநாளிலேயே நெஞ்சுச்
சளியாக மாறி, தூங்கும்போதுகூட
கர் கர் என்று சப்தம் வரும். ஒருவயது வரை பால் மட்டுமே குடித்து வளர்ந்ததாலோ
என்னவோ பால் பொருட்கள் என்றால் இன்னமும் வாந்தி எடுக்கிறான். நொறுக்குத் தீனிகளை
அடித்து விளாசுவான். அப்புறம்
வயிறு வலிக்கிறது என்று படுத்துக் கிடப்பான். சித்தார்த்தாவுக்கும்
கவிதாயினிக்கும் மூன்றரை வயது வித்தியாசம். நல்ல இடைவெளிக்குப் பிறகே அவன் கண்
முன்னே தாயின் வயிற்றில் வளர்வதைப் பார்த்தான். சவலைப் பிள்ளையாய் போய்விடக்கூடாது
என்பதற்காகவே அடிக்கடி அவனிடம் சொல்வோம் 'பாப்பா உனக்காக, உங்கூட விளையாடறதுக்காகத்தான் வர்றாள். அவளை நாமதான் பத்திரமா
பாத்துக்கணும். அவளுக்கு வேற யாரும் கிடையாது'. அவள் அழுதால் இவனும் அழுவான். சிலநேரம் கோபத்தில் அடித்துவிட்டு
பின்னர் வந்து அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருப்பான். போனவாரம் ஒரு சிப்ஸ்
பாக்கெட் மனைவி வாங்கி வந்திருந்தாள். இவன் பாட்டுக்கு உட்கார்ந்து முக்கால்வாசி
காலிபண்ணிவிட்டு அவன் அம்மாவிடம் சொல்கிறான், 'அம்மா, பத்திரமா எடுத்து வைங்க. நாளைக்குச் சாப்பிடறேன்'. இவள் சும்மாயில்லாமல் நாள்பூரா அவனைச் சொல்லிக் காட்டிக்கொண்டே
இருந்தாள் 'கொஞ்சமாவது
அந்தப் பிள்ளைக்குக் குடுத்தியா, இல்லை அம்மாவுக்கு குடுத்தியா. நீபாட்டுக்கு சாப்டுட்டு மீதியை
பத்திரமா எடுத்து வைக்கச் சொல்ற' இப்படியே அவள் சொல்லிக் கொண்டிருக்கவும் அவன் சப்தமில்லாமல் அழ
ஆரம்பித்தான். பின்னர் சொன்னான், 'இவ உங்க வயித்திலயே இருந்திருக்கலாம்'
நேற்று இரவு வீட்டுக்குப் போகும்போது
நல்ல பசி. வழக்கமா கொஞ்சம் லேட்டாய்ப் போவேன் (10:10 அப்போதுதான்
வாணிராணி முடியும்) நேற்று கொஞ்சம் முந்திவிட்டேன். கவிதாயினி இட்லிக் கொப்பரையை
ஹாலுக்கு எடுத்து வந்து 'அப்பா
நான் இட்லி செஞ்சு தர்றேன்' என்று
இட்லித்தட்டுகளை வரிசையாய் எடுத்துவைத்து, மாவூற்றி, வேகவைத்து, தட்டை
இறக்கி (கையை சுட்டுக்கொண்டாள்), சட்னி, பொடி தொட்டு ஊட்டி விட்டாள். நாடகம்
முடிந்து மனைவி தோசை போட்டுக் கொண்டுவந்தாள். இவள் தட்டைப் பிடுந்து அந்தப்பக்கம் வைத்துவிட்டு வெறுங்கையை நீட்டி 'ஊம் இட்லி சாப்புடுங்க' என்கிறாள். இப்படியே நான்குமுறை செய்யவும், 'இட்லி போதும் ஜூஸ் போட்டுக் கொண்டா. கிச்சன்ல போய்ப் போட்டு
டம்ளர்ல ஊத்தி எடுத்துட்டு வா' ன்னு அனுப்பி விட்டேன். நைசாக நான் தோசையை எடுத்துச்
சாப்பிடும்போது இடுப்பில் கையை வைத்துக்கொண்டு பார்த்து முறைத்தாள். அழுதுகொண்டே
போய்ப் படுக்கையில் படுத்தவள் தூங்கிவிட்டாள்.
"அப்பா, புத்தகத்துலருந்து இல்லாம, உங்க
மனசுல இருக்கும்ல, அந்தக்கதை
சொல்லுங்க"
"சரி, ஒரு ஊருல ஒரு குட்டிப்பையன் இருந்தானாம். அவன் பேரு
பாலு. இரண்டாம் வகுப்பு படிச்சிட்டிருந்தான். அவங்க தெருவில அவனை மாதிரியே நிறைய
குட்டிப் பையன்கள் அவனுக்கு ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்க. இதுமாதிரி மழைக்காலத்தில அவன்
பாட்டி ஊருக்குப் போயிட்டு வந்தான். அப்போ அவன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ஆளாளுக்கு
ஐந்தாறு பட்டுப்பூச்சி வச்சிருந்தாங்க. பட்டுப்பூச்சி பார்க்க ரொம்ப
அழகாயிருக்கும். சிவப்பு கலர்ல குட்டியா
மெத்துமெத்துன்னு இருக்கும். பூச்சியை அழகா ஒரு பெட்டி செஞ்சி அதுல மண் போட்டு
கொஞ்சம் புல்லும் வச்சிருந்தாங்க. பட்டுப்பூச்சி மண்ணைத்தோண்டி உள்ளயும் வெளியயுமா
போய் வந்துட்டிருந்துச்சி. பாலுவுக்கு பட்டுப்பூச்சி மேல ரொம்ப ஆசையாயிருந்துச்சி.
ஆனா அவன் ஃப்ரெண்ட்ஸ் யாருமே தரமாட்டேன்னுட்டாங்க. வீட்டுல வந்து அம்மாகிட்ட
பட்டுப்பூச்சி வேணும்னு அழுதான். அவங்கம்மா சமையல் வேலையா இருந்ததால அவனை
சத்தம்போட்டு அனுப்பிட்டாங்க. பாலு ரொம்பநேரம் அழுதவன், வீட்டிலிருந்து
கிளம்பிப் போயிட்டான்.
ஊருக்கு வெளிய இருந்த பொட்டக்காட்டுல பட்டுப்பூச்சி
கிடைக்குமான்னு தேடினான். ரொம்பநேரம் தேடியும் ஒன்னுகூட கிடைக்கலை. 'கடவுளே எனக்கு ஒரே ஒரு பட்டுப்பூச்சியாவது குடு'ன்னு வேண்டிக்கிட்டான். ஆனாலும் கடவுள் கேட்கலை.
சாயங்காலமாயிடுச்சி. மழை பெய்ய ஆரம்பிச்சுச்சு. சுத்திமுத்திப் பாத்தவனுக்கு எங்க
இருக்கம்னு தெரியலை. வீட்டுக்கு வழியும் தெரியலை அவனுக்கு. ரொம்ப அழுதான். அப்ப
அந்தவழியா ஒரு மாமா சைக்கிள்ள வந்தாரு. என்ன ஏதுன்னு அவனை விசாரிச்சாரு. அப்பவும்
அவன் பட்டுப்பூச்சி வேணும்னு அழுதான். அவர் அவனை சைக்கிள்ல் உட்கார வச்சி இன்னொரு
இடத்துக்குக் கூட்டிப்போனாரு. அவர் தேடிப்போய் அவனுக்கு அழகா ரொம்பச் சின்னதா
பிறந்து ஒருநாளே ஆன ஒரு பட்டுப்பூச்சி பிடிச்சிட்டு வந்து தீப்பெட்டிக்குள்ள
போட்டு, கொஞ்சம் மண், புல்லெல்லாம் போட்டுக் கொடுத்தார். பாலுவுக்கு ரொம்ப
சந்தோஷம்.
உன் வீடெங்கருக்குன்னு கேட்டாரு. பாலு திகைச்சுப்போய்
பழையபடி அழ ஆரம்பிச்சான். சரி சைக்கிள்ல உட்காருன்னு அவனைக்கூட்டிக்கிட்டு போலீஸ்
ஸ்டேஷன் போனாரு. அங்க இருந்த போலீஸ்காரர்ட்ட விபரம் சொல்லி விட்டுட்டு பாலுவுக்கு
ஒரு சாக்லேட்டும் கொடுத்துட்டு அந்த மாமா போயிட்டாரு. போலீஸ்காரர் அப்பா என்ன வேலை
செய்யறார், வீட்டுக்குப் பக்கத்துல
என்னென்ன இருக்கும் எல்லா விபரமும் அவனிடம் கேட்டுட்டு பாலுவை சைக்கிள்ல வச்சி
ஒருவழியாத் தேடி வீட்டைக் கண்டுபிடிச்சு விட்டாரு. காலைலருந்து பிள்ளையக் காணாம
அவங்கம்மா சாப்பிடாம அழுதுட்டிருந்தாங்க. அவங்கப்பா அவனைத்தேடி ஒவ்வொரு இடமாப்
பாத்துட்டு இருந்தாங்க. பாலுவைப் பாத்ததும் அவனோட அம்மா கட்டிப்பிடிச்சு அழுதாங்க.
பாலுவும் அழுதான். போலீஸ்காரருக்கு ரொம்பவும் நன்றின்னு சொல்லி வழியனுப்பிச்சி
வச்சாங்க. அவர் போனதும் 'இப்படிச் சொல்லாம
எங்கியும் போவியா, போவியான்னு' பாலுவுக்கு செம்மையா சாத்து விழுந்திச்சி. அவ்வளவுதான்
கதை"
இதைச்
சொல்லி முடித்ததும், சித்தார்த்தா 'அப்பா எனக்கும் பட்டுப்பூச்சி வேணும்' என்று அடம்பிடித்தான். பொடுசு கவிதாயினியும் காலைக்கையை
உதைத்துக்கொண்டு கூட வருவேன் என்று அழுதாள். சரியென்று மூன்றுபேரும் பொதிகை நகரில்
பொட்டலாய்க் கிடந்த இடத்தில் தேடினோம். எதிர்பார்த்தபடி ஒன்றுகூடக் கிடைக்கவில்லை.
ஆனால் புல்காட்டிற்குள் குழந்தைகள் சந்தோஷமாக விளையாடினர். சிறு சிறு பூச்சிகள்
வண்டுகளைப் பார்த்து கவிதாயினிக்கு ரொம்ப சந்தோஷம்.
வீட்டு வாசலில் கால் வைத்ததும்
கவிதாயினி ஓடிவந்து காலைக்கட்டிக்கொள்வாள். அவளைத் தூக்கிக்கொண்டதும் கழுத்தோடு
சேர்த்து இறுக்க அணைத்தபடி சிலநொடிகள் இருப்பாள். இரண்டு கன்னத்திலும் மாறிமாறி
முத்தமிட்டுப் பேச்சுக்கொடுத்தபடி வருவேன். அவள் தான் தண்ணீர், சாப்பாடு எடுத்துவைப்பாள். சட்னி, குழம்பு பரிமாறுவாள். நேற்று நான் வண்டியை உள்ளே
கொண்டுவரும்போது கீழ்வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தாள். வெளியே வரவில்லை. நான்
வீட்டுக்குப் போய் அரைமணிக்குப் பிறகு வந்தாள். அப்பா என்றபடி மடியில் உட்கார்ந்தாள். நான், 'நான் வர்றது தெரிஞ்சும் நீ வீட்டுக்கு வரலைல. எங்கூட பேசாதே' அவள் அழப்போகும் பாவனையில் போனவள் டேபிளில் நாடி இடித்து
ஓவென்று அழ ஆரம்பித்தாள். உதட்டில் இலேசாய் இரத்தம் தெரிந்தது. அவள் அம்மா வந்து
பார்த்தாள். வாயைக் காட்டமாட்டேன் என்றாள். நான் வந்து 'சேரிம்மா, என் செல்லம்ல.
கொண்டா பாப்போம்' -என்றதும்
கட்டிக்கொண்டு அழுதாள். டம்ளரில் தண்ணீர் கொடுத்தேன். மடியில் போட்டு
தட்டிக்கொடுத்துக் கொண்டே இருந்ததில் தூங்கிவிட்டாள்.
Comments
Post a Comment