மொழிபெயர்ப்பு கவிதைகள்

அட்ரியன் மிசெலின் (1932-2008) கவிதைகள் குறித்து: இவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இடதுசாரி. இடதுசாரிகளைப் போலவே, கவிதையைத் தொடங்குமுன் முதலில் மேடையில் ஏறிக்கொள்கிறார். பின்னர் பெருங்கூட்டத்தை நோக்கிப் பாட ஆரம்பிக்கிறார். வே.நி. சூர்யாவின் புதிய சிற்றிதழுக்காக மொழிபெயர்த்தது. இதழில் வரவில்லை என்று நினைக்கிறேன். இந்தக் கவிதைகள் எளிமையானவை. நேரடியானவை. தமிழகத்தில் இதுமாதிரி எழுத மனுஷ்யபுத்திரன் தொடங்கி நூற்றுக்கணக்கான கவிஞர்கள் இருக்கிறார்கள்

ஒருநாள் சத்தியம் என்னை அடித்துக் கீழே தள்ளியது
அந்த விபத்துக்குப் பிறகு நான் இப்படித்தான் நடக்கிறேன்
எனவே என் கால்களை பசைத்தாளால் ஒட்டுங்கள்
உங்கள் வியட்நாம் பொய்களைச் சொல்லுங்கள்

கடிகாரத்தின் அலாரம் வலியில் அலறுகிறது
என்னை நானே கண்டுணர முடியவில்லை; நான் திரும்பத் தூங்கப் போய்விட்டேன்
எனவே என் காதுகளை வெள்ளியால் பூசுங்கள்
கால்களை பசைத்தாளால் ஒட்டுங்கள்
உங்கள் வியட்நாம் பொய்களைச் சொல்லுங்கள்

கண்களை மூடும்போதெல்லாம் தீப்பிழம்புகளைக் காண்கிறேன்
மார்பிளால் ஆன தொலைபேசிப் புத்தகம் செய்து எல்லாப் பெயர்களையும் அதில் செதுக்கினேன்
எனவே என் கண்களின்மீது வெண்ணெய்யால் உறையிடுங்கள்
என் காதுகளை வெள்ளியால் பூசுங்கள்
கால்களை பசைத்தாளால் ஒட்டுங்கள்
உங்கள் வியட்நாம் பொய்களைச் சொல்லுங்கள்

ஏதோ கறுகும் வாடையடிக்கிறது; என் மூளையாகத்தான் இருக்குமென்று நம்புகிறேன்
அவர்கள் பெப்பர்மின்ட் மிட்டாய்களையும், டெய்சிப்பூ வளையங்களையும் மட்டும்தான் வீசுகிறார்கள்
எனவே என் மூக்கில் பூண்டுப்பசையை நிரப்புங்கள்
என் கண்களின்மீது வெண்ணெய்யால் உறையிடுங்கள்
என் காதுகளை வெள்ளியால் பூசுங்கள்
கால்களை பசைத்தாளால் ஒட்டுங்கள்
உங்கள் வியட்நாம் பொய்களைச் சொல்லுங்கள்

அக்கொடுஞ்செயல் நடக்கையில் நீங்கள் எங்கிருந்தீர்கள்?
நட்டுவைத்த நினைவுச்சின்னங்கள் சகதியைக் குடித்துக் கொண்டிருக்கின்றன.
எனவே என் நாவினை விஸ்கியுடன் இணையுங்கள்
என் மூக்கில் பூண்டுப்பசையை நிரப்புங்கள்
என் கண்களின்மீது வெண்ணெய்யால் உறையிடுங்கள்
என் காதுகளை வெள்ளியால் பூசுங்கள்
கால்களை பசைத்தாளால் ஒட்டுங்கள்
உங்கள் வியட்நாம் பொய்களைச் சொல்லுங்கள்

உங்கள் குண்டுவீசுபவர்களை உள்ளிறக்கும்போது, மனசாட்சியை வெளியேற்றுகிறீர்கள்.
மனிதத்தை உங்கள் இஷ்டத்திற்குத் திருகுகிறீர்கள்
எனவே என் தோலில் பெண்களைக் கொண்டு தேயுங்கள்
என் நாவினை விஸ்கியுடன் இணையுங்கள்
என் மூக்கில் பூண்டுப்பசையை நிரப்புங்கள்
என் கண்களின்மீது வெண்ணெய்யால் உறையிடுங்கள்
என் காதுகளை வெள்ளியால் பூசுங்கள்
கால்களை பசைத்தாளால் ஒட்டுங்கள்
பொய் சொல்லுங்கள், பொய் சொல்லுங்கள் ஆப்கானிஸ்தான் பற்றி.
இஸ்ரேல் பொய்களைச் சொல்லுங்கள்
காங்கோ பொய்களைச் சொல்லுங்கள்
சொல்லுங்கள், சொல்லுங்கள் மதிப்பிற்குரிய புஷ் அவர்களே.
பொய் சொல்லுங்கள் திருவாளர். பி-பி-பிளேர், பிரவுன், பிரவுன் பிளேர்.
வியட்நாம் பொய்களைச் சொல்லுங்கள்


கவிதை என்பது…
அம்மணமான வார்த்தைகள் ஒன்றாய் நடனமிடுவதைப் பாருங்கள்!
எல்லோரும் தர்மசங்கடத்தில் நெளிகிறார்கள்.
இதற்கு ஒன்றுதான் செய்யமுடியும்;
உங்கள் ஆடைகளைக் கலைந்து
நடனத்தில் கலந்துகொள்ளுங்கள்.
அம்மணமான வார்த்தைகளுடன் ஆடையில்லா மனிதர்களின் நடனம்.
ஆனால் இது பிரச்சினையை உண்டாக்கப் போகிறது.
ஹா, இதோ வந்துவிட்டது கவிதைகளின் காவல் இலாகா.
தொடர்ந்து ஆடுங்கள்.


மனிதர்கள்
உங்கள் கைகளைப் பாருங்கள்
உங்கள் அழகான பயனுள்ள கைகள்;
நீங்கள் குரங்கினத்தைச் சேர்ந்தவரில்லை
நீங்கள் ஒரு கிளி இல்லை
நீங்கள் மெதுவே நகரும் தேவாங்குமில்லை
அல்லது ஒரு திறன்வாய்ந்த ஏவுகணையுமில்லை
நீங்கள் மனிதர்

பிரித்தானியரில்லை
அமெரிக்கரில்லை
இஸ்ரேலியரில்லை
பாலஸ்தீனருமில்லை
நீங்கள் மனிதர்

கத்தோலிக்கரில்லை
பிராடஸ்டண்ட் இல்லை
இஸ்லாமியரில்லை
இந்துவுமில்லை
நீங்கள் மனிதர்

நாம் மனிதராக ஆரம்பிக்கிறோம்
மனிதராக முடிகிறோம்
மனிதமே முதல்
மனிதமே இறுதி
நாம் மனிதர்
அல்லது நாம் ஒன்றுமில்லை

ஒன்றுமில்லை; ஆனால் வெடிகுண்டுகள்
மற்றும் விஷவாயு
ஒன்றுமில்லை; ஆனால் துப்பாக்கிகள்
மற்றும் சித்திரவதைக்காரர்கள்
ஒன்றுமில்லை; ஆனால் அடிமைகள்
பேராசைக்கும் போருக்கும்
நாம் மனிதராய் இல்லாத போது

உங்கள் உடலைப் பாருங்கள்
அதன் வியப்பூட்டும் அமைப்பை;
நரம்பிழைகள் மற்றும் இரத்தக்குழாய்களை
உங்கள் மனதைப் பற்றி யோசியுங்கள்
அதைப்பற்றியே அது சிந்தித்துக்கொள்வதை
அப்புறம் மொத்த உலகத்தையும்;
உங்கள் முகத்தைப் பாருங்கள்
பேரச்சத்தில் உறையக்கூடியதும்,
அல்லது காதலில் கரைந்துருகக்கூடியதும்.
அனைத்துடனும் வாழ்க்கையைப் பாருங்கள்
அதன் எல்லா அழகினையும்
நீங்கள் மனிதர்
அவர்கள் மனிதர்கள்
நாம் மனிதர்கள்
மனிதராய் இருக்க முயல்வோம்.
நடனமிடுங்கள்!


மரணம் நான் நினைத்ததைவிடச் சிறிது

என் அம்மா, அப்பா சில வருடங்களுக்குமுன் இறந்துவிட்டனர்.
நான் அவர்களிடம் மிகவும் அன்பு வைத்திருந்தேன்.
அவர்கள் இறந்தவுடன் எனதன்பு
குறையவோ மறையவோ இல்லை.
அது அப்படியேதான் இருந்தது
துக்கத்தின் நிறச்சாயலோடு.
மேலும் அவர்களது அன்பை என்னால் உணரமுடிகிறது
முன்பிருந்ததைப்போல அப்படியே.

இப்போதெல்லாம் மகிழ்ச்சி அல்லது துயரம் சூழ்ந்த சமயங்களில்
சிலநேரங்களில் என் அம்மா, அப்பாவைக் கேட்கிறேன்
என்னுடன் நடந்து வரவோ அல்லது என் அருகில் அமர்வதற்கோ.
நாங்கள் பேசிக்கொள்கிறோம்
அல்லது அமைதியாய் இருக்கிறோம்.

அவர்கள் எப்போதும் என்னிடம் வருகிறார்கள்.
நான் அவர்களிடம் பேசுகிறேன்; அவர்கள் பேசுவதைக் கேட்கிறேன்.
யோசித்துக் கொண்டிருக்கையில், அவர்கள் என்னிடம் கூறுவது கேட்கிறது
இது ரொம்பவும் எளிமையானது –
ஆன்மிகத்துடன் எந்தச் சம்பந்தமுமில்லை
மதமோ அல்லது ஏமாற்றுவித்தையோ இல்லை.
இது கற்பிதம்.
இது உண்மை.
இது அன்பு.


தொலைபேசி

தொலைபேசி சொன்னது நீ செத்துவிட்டாய் என்று.
எல்லாத் தொலைபேசிகளின் முட்டாள் தலைகளையும் வெறுக்கிறேன்
பேசாமல் பாளம் பாளமாய் அடுக்கிவைத்த கற்களைப் பார்த்தபடி அமர்ந்திருப்பேன்,
தொலைபேசிப் பாம்பைக் கையில் பிடிப்பதைவிட.


பிரபஞ்சவெளியில் பாடல்

மனிதன் முதன்முதலில் வானம் தாண்டிப் பறக்கையில்
திரும்பிப் பார்த்தான் உலகின் நீலக் கண்களை
மனிதன் கேட்டான்: உன் கண்களை நீலமாக்குவது எது?
பூமி சொன்னது: பெருங்கடலின் கண்ணீர்த் துளிகளால்
ஏன் கடல்கள் கண்ணீரால் நிரம்புகின்றன?
ஏனெனில் நான் பலவாயிரம் ஆண்டுகளாய் அழுதுகொண்டிருந்தேன்
நீ ஏன் அழுகிறாய், பிரபஞ்சவெளியில் நடனமிடும்போது?
ஏனெனில் நான் மனித குலத்தின் தாய்.



படிக்கட்டுகளின் மேலிருந்து
அவள் கையைத் தரச்சொல்லிக் கேட்கிறேன். சரி,
அவள் கரத்தைத் தந்தாள்.
அவள் விரல்கள் என் உள்ளங்கைக்குள் பொருந்திக்கொள்வது
எத்தனை ஆறுதலாய் இருக்கிறது.
போதிய நேரம் எடுத்துக்கொண்டோம்
செங்குத்தாய் கீழிறங்கும் கம்பளவிரிப்பில்
அமைதியாய் வேண்டிக்கொள்கிறேன்
இந்தப் படிக்கட்டுகள் முடிவில்லாது தொடரட்டுமென்று.


அதற்காக வருந்துகிறேன்

உண்மை ஒரு வைரம்
வைரம் இறுகியது
உங்கள் இருத்தல் என்பது இல்லை
ஒரு கடனட்டை இல்லாமல்

அதற்காக வருந்துகிறேன்
அதற்காக வருந்துகிறேன்
தெற்கு ஆப்பிரிக்கக் காவலர்கள்கூட
இந்த வருத்தம் தெரிவித்தலைச் செய்கிறார்கள்

என்னிடம் அவர்கள் உலகத்தைக் காட்டிச் கேட்கிறார்கள்:
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நான் சொன்னேன்: பாதி பெண்களைப் பற்றியது
பாதி மதுவைப் பற்றியது

மற்றும் அதற்காக வருந்துகிறேன்
அதற்காக வருந்துகிறேன்
அம்மா எனக்கு சாராயம் தேவை
நான் அதற்காக வருந்துகிறேன்

ஆனால் உங்கள் மனசாட்சியை
நாய்களுக்குப் போடும் உணவுத்துண்டுகளைப் போல ஆக்கிவிட்டால்
நீங்கள் தேர்ந்தெடுக்கப்படலாம்
குடிகாரர்களின் சபைக்கு.

அதற்காக வருந்துகிறேன்
அதற்காக வருந்துகிறேன்
நீங்கள் மீண்டுமொருமுறை சிந்திக்க வேண்டியதில்லை
நான் அதற்காக வருந்துகிறேன்

நீங்கள் உங்கள் மண்டையையோ
ஒரு அரசியல்வாதியையோ நோண்டிக்கொண்டிருங்கள்
நான் நடனமாடுகிறேன்
அதற்காக வருந்துகிறேன் என்று பெயர் அதற்கு

உங்கள் வெள்ளையின ஆதிக்கத்தைச் செலுத்துங்கள்
அல்லது நிலவுடமையாளர்களின் எலியாக
ஆனால் நான் பள்ளம் தோண்டிக்கொண்டே இருப்பேன்
அதற்காக வருந்துகிறேன் என்று சொல்லிக்கொள்வதற்கு

அதற்காக வருந்துகிறேன்
அதற்காக வருந்துகிறேன்
அவர்கள் என்னை துப்பாக்கிகளுடன் நடனமாட வைக்கிறார்கள், மேலும் பத்திலிருந்து ஒன்றுக்கு
நான் அதற்காக வருந்துகிறேன்

அட, கவிஞர் ஜான் பெட்ஜமென், நீங்களா
இத்தனைநாள் எங்கிருந்தீர்கள்?
தூய்மையற்ற பக்கிங்ஹாம் தாண்டி
இளவரசி மார்கரீனுடன்.

அதற்காக வருந்துகிறேன்
அதற்காக வருந்துகிறேன்
பாப் இசை வீரப்பெருந்தகையான என்னுள் செல்கிறது
யேசுவே! ஆனால் அதற்காக நான் வருந்துகிறேன்

பணம் நடந்து செல்வதைக் கண்டேன்
இதோ இந்தச் சாலையில்
அதன் கழுகைப்போன்ற நகங்களோடு
தேரையின் முகம்கொண்டு
உன் பெயர் எனக்குத் தெரியுமடி
முன்பே பார்த்திருக்கிறேன்
உன் மாயா ஒப்பனையில் அறையவேண்டும்
மூன்றாம் உலகப்போருக்காக

அதற்காக வருந்துகிறேன்
அதற்காக வருந்துகிறேன்
யாரோ உலகத்தை நெருப்பிடட்டும்
நான் அதற்காக வருந்துகிறேன்




Comments

Popular posts from this blog

புதுமைப்பித்தன் படைப்புகள் – ஒரு மீள்பார்வை

தண்டியலங்காரம்: பொதுவியல்

தீப்பெட்டி