தீப்பெட்டி

30 வருடங்களுக்கு முன் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் தீப்பெட்டி ஒட்டாத வீடுகளே கிடையாது எனலாம். சிறுவர் சிறுமியர், பெண்கள் தினசரி சுவர் ஓரத்தில் அமர்ந்து குண்டு பல்பின் சோகை மஞ்சளொளியில் அடிப்பெட்டி ஒட்டிக்கொண்டு, கட்டை அடுக்கிக்கொண்டு இருப்பார்கள். வானொலி ஒலித்துக்கொண்டிருக்கும். தீப்பெட்டி ஆபிசுக்கு பெண்களை வேலைக்கு வரவைக்கவென்றே ஆம்பிளிபயர்கள் வாங்கிவைக்கப்பட்டன. ஒலிச்சித்திரங்கள் ஒலித்தன. பெண்களின் கையில் நாலுகாசு நடமாட வைத்தது தீப்பெட்டி. வீட்டில் ஆண்பிள்ளைக்கு வேலையில்லை என்றால் சமாளித்து நிற்க தீப்பெட்டிதான் உதவியது. 

தீப்பெட்டி ஒட்டுவதில் மூன்று பிரிவுகள் உண்டு. அடிப்பெட்டி, மேப்பெட்டி, கட்டை அடுக்குதல். கட்டையில் ஒரு இஞ்சு அகலமும் அரை மீட்டர் நீளமும் உள்ள மரச்சக்கைகளில் 50 குறுக்குக்கோடுகள் போடப்பட்டிருக்கும். ஐம்பது சக்கைகள் கொண்டது ஒரு கட்டை. இந்தச் சக்கைகளின் இரு ஓரங்களிலும் துளைகள் போடப்பட்டிருக்கும். ஐம்பது சக்கைகளை மருந்து நிரப்பாத தீக்குச்சிகளை அடுக்கி நிரப்பி (ஒரு சக்கைக்கு 50 குச்சிகள் வீதம்) இருபுறமும் கம்பிகளுக்குள் சக்கைகளைச் செருகி கொண்டி போட்டு இறுக்கிவைக்க வேண்டும். எனக்கு கட்டை அடுக்குவதில் அலாதியான ஆர்வமுண்டு. குச்சிகளை கொத்தாகக் கையில் அள்ளி, சீட்டுக்கட்டுகளை ஒழுங்குபடுத்துவதுபோல் ஒரே சீராக ஒரு கைக்குள் குச்சிகளைக் கொண்டுவந்து சக்கையில் அப்படியே நிரவிவிட்டு, சக்கையை ஒரு குலுக்கு குலுக்கினால் பாதி குச்சிகள் அதற்கான குழிகளுக்குள் உட்கார்ந்துவிடும். திறமையானவருக்கு முக்கால்வாசி உட்காரும். மீதியை வலதுகை ஆட்காட்டி விரலும், இடதுகையில் உள்ளங்கைக்குள் குச்சிகள் இருக்க ஆட்காட்டி விரலாலும் பியானோ இசைப்பதுபோல் இலேசாய் குச்சிகளை அசக்கினால் சரியாக உட்கார்ந்துவிடும். 

ஆனால் அம்மா எப்போதும் அடிப்பெட்டிதான் வாங்குவார். அடிப்பெட்டி மிகக் கடினமான வேலை. தீப்பெட்டி ஆபிசில்போய் நமக்கான சிட்டையைக் கொடுத்து (பாக்கெட் நோட்) கச்சாப்பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். பசை மாவு, பசை தயாரிக்க நுணுக்கப்பட்ட துத்தம், தாள், குச்சி, சில்லு இவைதான் கச்சாப்பொருட்கள். 150 குச்சிகள் சேர்ந்து கட்டுப்போட்டு தருவார்கள். இந்த கட்டுகளைக் கொண்டுதான் கூலி கணக்கிடப்படும். முதலில் பசை காய்ச்சவேண்டும். மாவை நீரில் கரைத்து கொதிக்கவிட்டு அதில் துத்தத்தைப் போட்டால் பசை தயார். துத்தம் விஷம். அந்தக் காலத்தில் துத்தத்தைத் தின்று நிறைய சாவுகள், காதல்தோல்விகள் விசேஷிக்கப்பட்டன. 

அடிப்பெட்டி ஒட்டுபவருக்கு இந்த கச்சாப்பொருட்கள் போக சொந்தமாக சில உபகரணங்கள் தேவை. அவை: அச்சுக்கட்டை, பலகை, பசைக்கோப்பை. பசைக்கோப்பையில் பசையை ஊற்றி வலதுபக்கம் வைத்துக்கொள்ள வேண்டும். முன்னால் பலகை. சம்பணமிட்டோ, ஒருகாலை நீட்டிக்கொண்டோ அமரலாம். பலகைக்கும் நமக்கும் நடுவில் குச்சிகள். பலகைக்குமேல் அச்சுக்கட்டையும் சில்லுகளும். அச்சுக்கட்டை பார்ப்பதற்கு கார் வடிவில் இருக்கும். அரையடி ஸ்கேல் நீளமுள்ள தாள்களை கலையாமல் எடுத்து பலகையின் நுனியோரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். பசையை வலதுகை ஆள்காட்டிவிரலில் எடுத்து தாள் முழுக்க இராவ வேண்டும். குச்சியை எடுத்து தாளின் கால்பகுதி விட்டு கீழே ஒரு ஓரமாக வைத்து அப்படியே தாளோடு தூக்கி, குச்சிகளில் ஆங்காங்கே வெட்டுக்கள் உள்ள இடங்களில் மடக்கினால் செவ்வக வடிவுக்கு வரும். அச்சுக்கட்டையின் தலையில் செவ்வகவடிவிலான சில்லைப் பொருத்தி குச்சியில் சுற்றப்பட்ட தாளை அச்சுக்கட்டையின் செவ்வகவடிவ தலைப்பகுதியைச் சுற்றி பொருத்த வேண்டும். மேலே நீட்டிக்கொண்டிருக்கும் தாளை சில்லின் மீது ஒட்டி எடுத்தால் அடிப்பெட்டி தயார். இப்படியே 150 முறை செய்தால் 1 கட்டு ஒட்டியதாக அர்த்தம். இதற்கு 90களில் வழங்கப்பட்ட கூலி ஒரு ரூபாய் இருபத்தைந்து காசுகள். கட்டு ஒட்டுவதற்கும் இதற்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள். அடிப்பெட்டி ஒட்டுவது கடினமானது. எனக்கெல்லாம் இரண்டுகால்களிலும் கரண்டைகால் மொளிகள்  கருத்துக் கிடக்கும். சனிக்கிழமை இரவு பார்த்தால் வலதுகை ஆட்காட்டி விரல் பசையில் நாள் முழுக்க விளையாடி அப்படியே விறைத்து அழுகிப்போனது மாதிரி இருக்கும்.

மேப்பெட்டி ஒட்டுவதுதான் இருப்பதிலேயே எளிது. கட்டுக்கு 150 அட்டைகள். முன்பு அட்டைக்குப் பதிலாக மரச்சில்லாக வந்தது. ஓரங்களில் ரோஸ் நிற சாயம் முக்கி கவர்ச்சியாக இருக்கும். கால்வாசி எடுத்து ஓரங்களில் பிடித்தபடி முன்னும்பின்னும் அசக்கினால் எல்லா அட்டைகளின் ஓரங்களும் தெரியும்படி சீராக வரும். இப்போது ஓரங்களில் பசையை இராவிக்கொண்டு, படக் படக்கென்று வலதுகையால் அட்டையை எடுத்து இடதுகைக்குள் அதக்கிக்கொண்டால் மேப்பெட்டி தயார். கட்டைக்கும் மேப்பெட்டிக்கும் காசு குறைவு. தீப்பெட்டி ஒட்டி நிமிர்ந்த குடும்பங்களில் எங்களுடையதும் ஒன்று.
TamilsNow News18 % ஜி.எஸ்.டி. வரியை ரத்து ...

Comments

  1. அபாரமான ஆரம்பம்,அண்ணாச்சி பத்திய விட முக்கியமான வேலை. சிறுவயது ஞாபகங்கள் எப்பொழுதும் சோடை போவதில.லை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

புதுமைப்பித்தன் படைப்புகள் – ஒரு மீள்பார்வை

தண்டியலங்காரம்: பொதுவியல்