வேண்டும் விடுதலை!

ஒரு தனியார் பள்ளியில் தலைமையாசிரியையாகப் பணியாற்றிய குடும்பத் தோழி ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். கடந்த ஒரு மாதமாக வேலையிலிருந்து தற்காலிக விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார். காரணம் பள்ளி இயங்கியபோது இருந்ததைவிட தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடப்பதினால் அதிகப் பணியழுத்தம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார். எப்போது வேண்டுமானாலும் திடீர் திடீரென ஆன்லைனில் கலந்துரையாடல் நடத்துவது, ஒருங்கிணைக்கும் வேலைகள் என குடும்பத்தைக் கவனிக்க முடியாத அளவு வேலைப்பளு. 


ஆனால் நான் சொல்லவந்த விஷயம் இதுவல்ல. இவர் முன்பு ஒரு ஐ.டி. நிறுவனத்தில் உற்பத்தித் துறையில் பணியாற்றியவர். திருமணத்துக்குப் பின் கணவர் அரசு வங்கியில் பணியாற்றுவதால் அந்த வேலையை விட்டுவிட்டு பள்ளியில் தலைமையாசிரியையாகச் சேர்ந்தார். இப்போது பணியில் இல்லாமல் இருக்கும்போது அவ்வப்போதைய அன்றாடச் செலவுகளுக்குக் கணவரைச் சார்ந்திருக்கும் நிலை. இது தனக்கு என்னவோ போல இருப்பதாகவும், வீட்டில் தண்டமாய் இருக்கும் உணர்வை ஏற்படுத்துவதாகவும் சொன்னார். வீட்டிலிருந்தபடியே பணியாற்ற முடியுமா, அப்படியென்றால் திரும்பவும் ஐ.டி. சார்ந்த வேலை வாய்ப்பு கிடைக்குமா, இந்த ஒன்பது வருடங்களாக அந்தத் துறையுடன் தொடர்பற்றுப் போனதால் அதில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் என்னென்ன, அவற்றையெல்லாம் தன்னால் படித்து புதிதாய் உள்ளே நுழையமுடியுமா, அல்லது இதையெல்லாம் விட்டுவிட்டு வேறு ஏதாவது நிறுவனம்சாரா பணியாளராகச் (freelancer) செயல்பட முடியுமா என்பதெல்லாம் அவரது கவலைகள்.



கணவரைச் சார்ந்து இருப்பது, செலவுகளுக்கெல்லாம் அவரிடம் கேட்டு நிற்பது அவருக்கு உறுத்துகிறது. இந்த உணர்வு பெரும்பாலான பெண்களுக்கு வருவதில்லை. சம்பாதிப்பது கணவன் பொறுப்பு; குடும்பத்தைப் பார்த்துக்கொள்வது மனைவி பொறுப்பு என்பதே மரபாக இங்கு உள்ளது. இந்த வரையறைக்குள் இருந்துகொண்டு என்னதான் பெண் விடுதலை குறித்துப் பேசினாலும் அது எடுபடுவதில்லை. அதாவது கணவனைச் சார்ந்திருப்பதுவரை பெண்ணால் தனித்து இயங்கவோ சிந்திக்கவோ முடியாது. இது ஆணாதிக்கம் சார்ந்த ஒன்றல்ல. உளவியல் சார்ந்த ஒன்று. ஒருவர்மீது பொருளாதாரரீதியாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சார்ந்திருக்க நேரும்போது ஒருவகையான அடிமைத்தனம் ஏற்படுகிறது. இதற்கு அடிப்படையாக பொருளாதாரத்தையே பார்க்கவேண்டும்.


பொதுவாக எனக்கு மார்க்சியம் மீது ஈடுபாடெல்லாம் கிடையாது. ஒரு சமூகச் சூழலுக்கும், வர்க்க வேறுபாடுகளுக்கும் பொருளாதாரம் மட்டுமே அடிப்படையல்ல என்பது என் எண்ணம். மேலும் இது இலோகாயதச் சிந்தனை. ஆனால் பெண்விடுதலையைப் பொறுத்தவரையில் மார்க்சியமே தீர்வு. அதாவது பொருளாதாரச் சுதந்திரம் அடைவதே பெண்விடுதலைக்கான வழி. எப்போது ஒரு பெண்ணால் யாரையும் சார்ந்திராத அளவுக்கு அவளால் சம்பாதிக்க முடிகிறதோ, அப்போது (தனது எதிர்காலம் குறித்த பயம் காரணமாக ஏற்படக்கூடிய) உணர்வுப்பூர்வச் சாயலும் விலகிவிடும். இது தரும் விடுதலையை ஒருமுறை சுவாசித்த பெண்ணால் அதை விடமுடியாது. அதற்காக அவளே போராடத் தொடங்குவாள். 

Comments

Popular posts from this blog

புதுமைப்பித்தன் படைப்புகள் – ஒரு மீள்பார்வை

தண்டியலங்காரம்: பொதுவியல்

தீப்பெட்டி